Friday, January 10, 2025

பனிபடரும் நினைவு


பறவை இறந்த பின்பும்
அது உதிர்த்த ஓர் இறகு பறந்து கொண்டிருக்கிறது

பறக்கும் பட்டாம் பூச்சியின் நிழல்
தரையில் நடைப் பழகுகிறது

பனிக்காட்டில் எரியும் நெருப்பு
குளிரில் நடுங்கியபடி ஆடுகிறது

நின்றுக் களைத்த மரங்கள்
நிழலாக நிலத்தில் உறங்கி ஓய்வெடுக்கிறது

வான் தவழும் நிலவு
நீர் கண்டு நீச்சல் பழகுகிறது

இப்படித்தான்,
அன்பின் நினைவுகள் 
அனைத்தையும் அனைவரையும்
எப்போதும் ஒருபடி மேல்
பதிந்து வைத்திருக்கும்

பனி படர்ந்த போதிலும்
நினைவில் அன்பின் பெரு வெளிச்சம்
ஒருபோதும் மங்குவதில்லை

Saturday, November 30, 2024

நிலந்தொடும் மழை


உனது கருணையைப் போல்
ஈரம் கசிகிற ஒரு மழை நாளில்
உனக்காகக் கடற்கரையோரக் 
குளம்பிக் கடையில் குழம்பியிருந்தேன் 

மண் சேர முயன்று தோற்றுப் போன மழை
ஏன் நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது ?
மழை குடித்த கடல்
ஏன் எப்போதும் போதையில் தள்ளாடுகிறது ?
மழையைப் பார்த்து நீ 
எப்போதும் கேட்கும் கேள்விகள்
மனதில் உன் நினைவோடு 
விளையாடிக் கொண்டிருந்தது

நீ வரும் முன்பே நமக்கான மேஜையில்
எதிரெதிரே அமர்ந்த தேநீர்
கோப்பையிலிருந்து ஆவியாகிப் போய்
ஒன்றை ஒன்று கட்டித் தழுவி கொண்டிருந்தது

கலவரப் புயலோடு வந்த நீ
என் எதிரே அமர்ந்தாய் 
கையில் ஒரு கூரிய வாளோடு

உன் கண்களிலிருந்து 
தற்கொலை செய்யத் தொடங்கியது மழை
தடுக்க முயன்ற
என் கைகள் தட்டி விட்டு
வாள் வீசி சென்றாய்

அன்பின் நிலம் தொட்ட
அந்த மழைத்துளியை 
பின் தொடர்ந்து சேர்ந்து கலந்தது
வடியும் குருதி

அப்போது அங்கே
 பூக்கத் தொடங்கியது
ஓர் அலரிப்பூ


 

Saturday, November 23, 2024

அன்பின் நினைவுகள்

 


அன்பின் நினைவுகள்

பறவை இறந்த பின்பும் 
அது உதிர்த்த ஒரு இறகு
பறந்து கொண்டிருக்கிறது








Sunday, October 27, 2024

நான் கடவுள்?

 


நான் ஏதோவாக இருந்தேன்

என்னைக் கடவுள் ஆக்கிக் கொண்டாடினார்கள்

இப்போது நான்

வேறு ஒரு கடவுளை 

தேடிக்கொண்டிருக்கிறேன்

Saturday, October 26, 2024

காலம்


இல்லாத எதிர்காலத்தை
இறந்த காலத்திற்கு
கடத்திக் கொண்டிருக்கிறது
இருந்து இல்லாமல் போகும்
நிகழ் காலம்

"நேத்து போய் அந்தச் சட்டை வாங்கி
உனக்கு நாளைக்குத் தரேன்" என்றபடி
பொம்மையிடம் பேசிக் கொண்டிருந்த
குழந்தையிடம்
காலம் குழம்பிப் போகிறது


 

Friday, October 18, 2024

தூய அன்பு

 



இருத்தலில் உணரும் அன்பும்
செயலில் உணர்த்தும் அன்பும்
நினைவில் உருகும் அன்பும்
சொல்லில் உதிரும் அன்பும்
ஒன்றல்ல

ஆனால்
காது பொத்தி நந்தியிடம்
சத்தமாய் சொல்லும் குழந்தையின்
தூய பிரார்த்தனைக்கு ஒத்தது
இவையாவும் 

Saturday, October 5, 2024

அன்பு

யானையைப் போல
வளர்ந்து நிற்கிறது
உனது அன்பு
அதன் நிழலில் 
படுத்து உறங்கும் பாகன்
எனது நம்பிக்கை 

பனிக் குடத்து நீரில்
மூச்சுத் திணறுவதில்லை 
உன் அன்பும் 
உன்னோடு இருக்கும் போதும் 
அப்படித்தான்