Saturday, October 26, 2013

நிழல்கள் ...!





நின்று களைத்த 
மரங்கள் யாவும்
தரையில் படுத்து ஓய்வு எடுத்தன 
நிழலாக ....!

Wednesday, October 23, 2013

நாம் சிரிக்கும் நாளே தீபாவளி ...!







குழந்தைகள் குதூகலிக்கும்
காகிதம் மறைத்திருக்கும்
ஒளியும் ஒலியும்
பொக்கே - பட்டாசு தீபாவளி

ஏழைகளின் வயிற்றெரிச்சலில்
வெடித்துப் போகும்
பட்டாசாலை -சிவகாசி தீபாவளி

தன் முதலாளி வீட்டின்
பழையெனக் கழிந்ததை
புதுசெனத் தன் பிள்ளைக்கு
அழகு பார்க்கும் - ஏழை தீபாவளி ..

டாஸ்மாகின் வருமானம்
புது இமையம் ஏற்றிடும்
குடிமக்கள் தீபாவளி ..

திரைகடல் ஓடிய
தனிமையில் வாடிடும்
சில உறவுகள் -தனிமை தீபாவளி ..

தீபாவளி முந்நாள் இரவு
தொங்களில் பயணப்படும்
மண்வாசனை தீபாவளி ..

தொலைகாட்சியில்
தொலைந்து போகிறது
நவயுகக் குடும்பத் தீபாவளி

வேட்டுச் சத்தம் மறந்து
சம்பள நோட்டுக்கு வேலை செய்யும்
கார்ப்ரேட் தீபாவளி ..

ராவணன் வென்ற
ராமன் கதை பேசும்
வடதேச தீபாவளி ..

நரகாசுரன் கொன்ற
கண்ணனை பேசும்
தென்திசை தீபாவளி ..

மொத்தத்தில்
சிரிப்பு வேட்டுச் சத்தம் கேட்க
வாழ்வில் மகிழ்ச்சி ஒலி பூக்க
நாம் சிரிக்கும் எந்நாளும் தீபாவளி ...

Thursday, October 17, 2013

தனிமை ...










வார்த்தைகளைக் கூட
தனது துணையாய்ப் பயன்படுத்த முடியாத
சூழ்நிலையில் சில தனிமைகள் இருக்கிறது ...

இறவா
விடியற் பொழுதில்
கொக்கரிக்கும்
ஊமைச் சேவலாய்
இந்தத் தனிமையும் கொக்கரித்துப் போகிறது ..

தனது
கால்தடங்கள் தெரியாவண்ணம் இருக்க
வந்த வழிநெடுக
புன்னகை சிந்தி
அழித்துப் போகிறது ...

உடைந்து போன
கண்ணாடியின் பின்பங்களை
ஒன்றுசேர்க்க முடியாமல்
அந்தச் சிதறிப்போன கண்ணாடியிலேயே
தன முகம் பார்த்துக்
வெறுமையில் சிரிகிறது தனிமை ...

சிறைபட்ட பூவிலிருந்து தப்பித்து
காற்றோடு போய்
கரைந்து
மறைந்து
தொலைந்து போன தன்னைத் தானே தேடும்
வாசம் போல
தன்னைத் தேடுகிறதிந்தத் தனிமை ....

பாலைவனத்தில்
ஒற்றையாய் நிற்கும்
பட்டுப்போன மரத்தில்
தேன் குடிக்கக் காத்திருக்கும்
வண்ணத்துபூச்சிக்கு
தனிமை சொல்லும்
உண்மை புரிவதில்லை ..

தனது தனிமையை
போக்கத் துணையாக
மீண்டுமொரு தனிமையிடமே
சரணடைந்து
தனிமையில் வாடுகிறது தனிமை ...

Monday, October 14, 2013

இணையக்காதல்





நான் போடும் 
கிறுக்களுக்கு 
முகபுத்தகத்தில் 
நீ போடும் விருப்பத்துக்காக 
மடிக்கணினியை 
மணிகணக்கில் 
என் மடியோடு 
அணைத்தப்படி 
திரை மீது 
விழி வைத்து
காத்திருக்கிறேன்

Sunday, October 13, 2013

சத்தம்




புரியும் 
சத்தங்கள் யாவும் 
மொழியாகிறது ,
புரியாத சத்தங்கள் யாவும் 
வலியாகிறது 

உண்மை அர்த்தம் ..!




குப்பையில் 
எறியப்பட்ட காகிதத்தில்
எழுதிய கவிதையின் 
அர்த்தத்தில்
எந்த மாற்றமும் இல்லை ...

தூங்கா நினைவுகள் ..



சில நினைவுகள் மட்டும் 
வேண்டாதவையாக 
தீண்டாதவையாக 
இருந்தும் 
அடிக்கடி 
வந்து போகிறது 
சுகமாக ..


சில 
சொல்வதுமில்லை 
வெல்வதுமில்லை 
ஆனாலும் 
மனதை விட்டு 
விலகுவதுமில்லை ..

சில 
பார்வையிலே 
புன்னகை கோர்வையிலே 
மட்டும் இருந்திருக்கும் ..
ஆயினும் 
கண்மூடும் வரை 
உள்ளிருக்கும் ..

காரணமில்லை 
காரியமில்லை 
பருவத்தில் 
உருவான புயலால் 
உண்டான சேதத்தின் 
மிச்சம்..

தனிமையில் 
விழிக்கும் 
இரவினில் 
முழிக்கும் 
கனவினில் 
ரசிக்கும் ..

முதற்பதியம் 
போட்ட நிலமாய் 
அதன் பயிராய் 
அதன் நினைவுகள் 
பசுமையாய்   ..

இறுதியாய் 
கண்மூடும் போது 
இது தூங்கும் ..
வாழ்கை முழுதும் 
இதன் பாரம் தாங்கும் ..

தாய்க்கு 
தலைமகனாய் 
இந்த நினைவுகள் 
ஒவ்வொருவருக்கும் ..




Monday, October 7, 2013

தனிமை..!





அந்த வீட்டின்
முற்புறத்தில் இருக்கும்
ஊஞ்சலில் உறவாட யாரும் இல்லை ,
தினமும் காற்று வந்து
ஊஞ்சலில் உறவாடிச் செல்கிறது ...