Sunday, September 4, 2011

புரிதல் ..!






தான் கலைத்த மேகங்களை ,
தொலைந்துப் போனதாக எண்ணி
வானத்திடம்
கேட்டுக் கொண்டு இருக்கிறது
காற்று ஒவ்வொரு நாளும் ..

காற்றால்  கலைக்கப்பட்ட  மேகங்கள் யாவும்
கைத்தவறி விழுந்துச் சிதறிய கண்ணாடியாக
உடைந்து போகிறது..

உருமாற்றம் என்பது ,
முன்னம் இருந்த நிலைத் தொலைந்து போதல் என்றால்
மேகம் தொலைந்து போனது எனலாம் ..

மேகம் கலைந்து  போதல் என்பது ,
தக்கனப் பிழைத்தல் என்றால்
காற்றின் தேடல் தவறு எனலாம் ..

பெரிய வட்டத்தின்
சிறிய புள்ளி நேராக இருப்பதாக எண்ணி ,
நேராகப் போவதாக நினைத்து
வட்டமடிப்பது போல
காற்று, தான் கலைத்த மேகத்தை
தேடிக்கொண்டிருக்கிறது ..

சிறு குழந்தையின்
மழலைக் கேள்வியாகவே
காற்றின் கேள்வி வானத்திடம்
முன்வைக்கப்படுகிறது ..

இரவு பகல் என
எதுவும் பாராமல்
அதன் தேடலும் ,
கேள்வியும்
நீண்டு கொண்டே போகிறது ..

பகலின் தொலைந்துப் போன
இரவின் இருளை வெளிச்சத்தில்
தேட முயற்சிப்பதைப் போல ,
காற்றின் தேடலும்
கேள்வியும் தொடர்கிறது ..

Friday, September 2, 2011

மயக்கம் ..!




என் இறுதிக்கு
ஒரு முடிவு காத்திருந்தது 
ஓட்டத்திற்கு ஓய்வாக ..
கருக்கொண்ட நாள் முதல்
ஓயாமல் துடித்தது 
சற்று நிற்க இசைந்தது ..

சுற்றி உற்றார் உறவினர் ,
என் தண்ணீரிலிருந்து வந்த சொத்து 
கண்ணீரோடு கரைந்திருக்க ,
தன் மீதியை விட்டுச் செல்ல முடியாமல் 
கண்ணீர் வற்றி என் பாதி அழுதிருக்க .‌.

கண்விழித்த நாள் முதல் 
காட்சியின் பாரம் சுமந்து ,
உணர்ச்சியின் ஈரம் சுமந்து 
கண்கள் கேட்டது விருப்ப ஓய்வு ..

ஆனால் மனமோ 
கண்கள் மேல் நோக்கிச் செலுத்தி 
ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறது இறுதியாக 
அது 
ஒரு குரல் 
ஒரு வாசம்
ஒரு தீண்டல்
ஒரு முத்தம்
ஓர் ஊடல் 
அஃது ஏதோ ஒன்று உறுதியாக ..  

தூரத்துக் கைப்பேசியில் அழைப்பொலியாய் 
என் விருப்பப் பாடலொன்று ஒலித்தது ..
நினைவுகளின் தாழ்வாரத்தில் ஆயிரம் கதிரொளி 
வெளிச்சத்தைத் அது தெளித்தது ..

அப்போது முற்றாக விழிகள் மூடும் நேரம் 
கண்களுக்குள் நாற்றாக வந்து நின்றது
அவள் அழகிய பூமுகம் ..
மூடிய விழிகள் திறக்கவே இல்லை
 அவள் அழகைக் கண்டு மயங்கி ..

நம்பிக்கை ..!




ஓடும் இரயிலில்
பொம்மை விற்கிறார்
பார்வை அற்றவர்
அங்கே ஓடுவது ,
தண்டவாளம் மீது
இரயில் மட்டுமல்ல 
நம்பிக்கை மேல்
அவர் வாழ்க்கையும் தான் ..!

மீன்களின் சிரிப்பு ..!







சேது சமுத்திரத்தின்
சாதுவான மீனவர்கள்
திசைமாறிக் கடக்கையிலே
தினசரித் தோட்டாவின் முத்தம்..

சுருக்குக் கயிற்றால்
இறுக்கி அணைப்பு ..

மீன்களை விட வதைபட்டு
பிடிபடும் பாவப் பிறவிகள் ..

கடலில் உப்பின் கணம் கூடுகிறது
எங்கள் கண்ணீரால் ..

புத்த தேசத்து மக்களின்
கீழ்த்தரமான புத்தியால்
வதைபடுகிறோம் ,
கடற்கரையோர கருவாடாய்
மிதிபடுகிறோம் ..

தினசரி சிந்தும் இரத்தம்
கடலோடு கரைந்து
மறைந்து விடுகிறது ..

வலியால் கத்தும் சத்தம் 
காற்றில் மறைகிறது  ..

நாங்கள் பிடிக்காமல் 
விட்டுச்சென்ற மீன்கள்,
எங்களைப் பார்த்து
ஏளனமாகச் சிரிக்கிறது ..