Sunday, September 4, 2011

புரிதல் ..!






தான் கலைத்த மேகங்களை ,
தொலைந்துப் போனதாக எண்ணி
வானத்திடம்
கேட்டுக் கொண்டு இருக்கிறது
காற்று ஒவ்வொரு நாளும் ..

காற்றால்  கலைக்கப்பட்ட  மேகங்கள் யாவும்
கைத்தவறி விழுந்துச் சிதறிய கண்ணாடியாக
உடைந்து போகிறது..

உருமாற்றம் என்பது ,
முன்னம் இருந்த நிலைத் தொலைந்து போதல் என்றால்
மேகம் தொலைந்து போனது எனலாம் ..

மேகம் கலைந்து  போதல் என்பது ,
தக்கனப் பிழைத்தல் என்றால்
காற்றின் தேடல் தவறு எனலாம் ..

பெரிய வட்டத்தின்
சிறிய புள்ளி நேராக இருப்பதாக எண்ணி ,
நேராகப் போவதாக நினைத்து
வட்டமடிப்பது போல
காற்று, தான் கலைத்த மேகத்தை
தேடிக்கொண்டிருக்கிறது ..

சிறு குழந்தையின்
மழலைக் கேள்வியாகவே
காற்றின் கேள்வி வானத்திடம்
முன்வைக்கப்படுகிறது ..

இரவு பகல் என
எதுவும் பாராமல்
அதன் தேடலும் ,
கேள்வியும்
நீண்டு கொண்டே போகிறது ..

பகலின் தொலைந்துப் போன
இரவின் இருளை வெளிச்சத்தில்
தேட முயற்சிப்பதைப் போல ,
காற்றின் தேடலும்
கேள்வியும் தொடர்கிறது ..

No comments: