Monday, October 31, 2011

நிகழ்வுகள் ..!






யாரும் தொடவில்லை
யாரும் பறிக்கவில்லை
ஆயினும்
இலைகள் உதிரும் ...



Sunday, October 30, 2011

சில நிகழ்வுகளின் தலைகீழ் விளைவுகளில் சில

சில நிகழ்வுகளின்
தலைகீழ் விளைவுகள் ,
அந்த நிகழ்வுகளின் தன்மையாக
நாம் நினைத்ததை
முன்னம் இருந்த நிலையிலிருந்து
தலைகீழாக மாற்றிவிடுகிறது..





சரியாக நாம் செய்வது
தவறாகப் போகும் வரை தெரியாது ,
நாம் செய்வது
சரியல்ல தவறு என்று ...

வீசும் காற்று
நம் மீது வந்து மோதும் வரை தெரியாது
வந்தது
பூங்காற்று அல்ல புயல் என்று ..

சொல்வதைச் செய்வதைச் சொல்லி ,
செய்யாமல் போகும் வரை தெரியாது ,
சொன்னது செய்யப்போகும் செயலல்ல சொல் என்று ...

சொன்னதை மட்டும் செய்தால்
சூழ்நிலையின் மாற்றம் மறந்தோமெனத் தெரியாது
செயலின் பிள்ளை சூழ்நிலை பிறக்கும் வரை ..

கண்ணீர் சிந்தும் சில நேரம்
சிரிப்பு வந்து முட்டும் வரை
தெரியாது
கண்ணீரும் இனிக்கும் என்று ..

மனதில் ஒட்டிய மனிதநேயம் ..!





என் வீட்டின்
மதில் சுவரில் ஒட்டிய
கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியை கிழித்தேன்..
அது ஓர் உயிரின் இறப்பு செய்தி..
சுவரில் ஒட்டிய அளவு கூட
என மனதில் ஒட்ட மறுக்கிறது ...

Wednesday, October 26, 2011

காற்றுக்கும் ஒரு பெண்மையுண்டு ..!




காற்றுக்கும் ஒரு பெண்மையுண்டு,
ஒவ்வொரு பெண்ணிடமும் காற்றின் தன்மையுண்டு ..

பெண்மை ..
நீக்கமற நிறைந்த தெய்வத்தின் வடிவம் என்றால் ,
நீக்கமற நிறைந்த காற்றே ,
நீயும் பெண்தான் ..

பெண்ணே ,
சிரித்துப் பேசி வந்தாய் ..
காற்றே
தென்றலாய் வீசி வந்தாய் ..

பெண்ணே ..
நீ படி தாண்டினால் வீடு தாங்காது ..
காற்றே ..
நீ புயலாய் மாறினால் நாடு தாங்காது ..

பெண்ணே ..
நீ மாலையிட்ட மணாளன் நின்றிருப்பான் ,
நீ சொன்னபடி எல்லாம் ஆடியிருப்பான் ..
காற்றே ,
நீ மாலையிட்ட மரமும் நின்றிருக்கும் ,
நீ சொன்னபடி எல்லாம் ஆடியிருக்கும் ..

பெண்ணே ..
ஓர் உயிரின் பிறப்பு பெண்ணிலிருந்து ..
காற்றே ..
ஒரு பூவின் பிறப்பு உன்னிலிருந்து ..

காற்றே ..
நிலவாவது அவள் முகம் காட்டினால் ..
நீ மட்டும் ஏன் வானத்தின் பின் ஒளிந்துகொண்டு ,
உன் இருப்பை மட்டும் உணரவைக்கிறாய் ?

நீ நிலவை விட அவ்வளவு அழகா ?
உன் முகத்தை மட்டும் காட்டினாலே
மானுடம் காதலில் சாகுமென மறைந்திருக்கிறாயோ??




 

Sunday, October 23, 2011

கனவு தேவதை ..!




அன்றொரு நாள் இரவில் ,
தூக்கம் இழந்தேன் .
தனியே எழுந்தேன் .
மேலே நடந்தேன் .
வானில் பார்த்தேன் .
தரையில் அமர்ந்தேன் .

மேலே நட்சத்திரக் கூட்டம் ஜொலித்தது .
என் மனதை அது மிகவும் கவர்ந்தது .
கூட்டத்தில் ஒன்று மிகவும் பிரகாசித்தது .

பார்ப்பதற்கு என் அருகில் வருவது போல் இருந்தது .
பார்க்கப் பார்க்க என்
பார்வையை நெருங்கியது ..
கண்சிமிட்டிப் பார்க்கையில்
என் அருகில் வருவது போல் இருந்தது .

தேவதை ..!
தேவதை..!
தேகமெல்லாம் தங்கமாய்
என் அருகில் ஒரு தேவதை ;

காட்சிகள் கண்களுக்கு மெய்ப்பட வில்லை .
மனமும் ஏனோ பயப்படவில்லை .
சிறிது நேரம் உறைந்து போனேன் ,
அவள் அழகை ரசிக்கையில் .

என் கருமணிகளும்
என் கண்களுக்குள்
சிறு குழந்தையெனத் துள்ளிக் குதித்து விளையாடுகிறது
அவள் அழகை ரசிக்கையில் ..

கரும் பாறையைத் தாண்டி விழும் அருவியாய் ,
அவள் கூந்தலும் அவள் சூடிய பூவும்.
மஞ்சள் நிலவாய் அவள் முகம் .
அதில் மயிலிறகாய் அவள் புருவம் .
அதன் கீழே பாலில் மிதக்கும் கருந்திராட்சைப் போல்
அவள் கண்கள் ..
பூவிதழ்களிலும் மெல்லிய ,
ஆண்களின் ஆசைகளைத் தூண்டும் காம ரேகை ஓடும்
செவ்விதழ் ..
மூங்கில் போன்ற வளைந்த அவள் தேகம் .
மூளை கிறங்கடிக்கும் ,
அழகிய வாழைத்தண்டு போன்ற கால்கள் ..
தாமரைப் போன்ற சிவந்த அவள் பாதம் ..

மெய் மறந்த வேளையில்
கல்யாணி ராகம் கேட்டேன்
ஆம் தேவதை சிரித்தாள்..

நிரம்பி இருக்கும் அணையைத் தாண்டி
வர முடியாத நதி நீரைப் போல் ,
அவளைக் கண்டதும்
தொண்டைக்குழியில் சிக்கிய வார்த்தைகள்
வெளிவரவில்லை ..

யாழினும் இனிய இசை
அன்று தான் நான் கேட்டேன்
ஆம். தேவதை பேசினாள் ..

"என்ன பார்க்கிறாய் ?",
இது தேவதை பேசிய முதல் வார்த்தை ..

"ஒன்றுமில்லை.." என்றேன் .
பின் மௌனத்தைப் புன்னகைத்தேன் ..

திடீரென ,
"என்னை முத்தமிடு " என்றாள்.

முக்கனியும் வந்து என்னைத் தின்றுவிடு என்பது போல் இருந்தது
அவள் சொன்ன அந்த வார்த்தை ..
ஆனால் ,
மனதில் ஒரு பயம் .
உணர்வில் ஒரு தயக்கம் .

பின் ,
பயத்தைக் கலைந்தேன்.
தயக்கம் இழந்தேன் .
அவள் அருகில் சென்றேன் .

அவள் முகத்தை என் கையோடு எடுத்தேன் .
நிலவை நான் கையில் தொட்டேன்.
ஆம் , நிலவை நான் கையில் தொட்டேன் .

பின் அவள் முகத்தோடு என் முகத்தை இணைத்தேன் .
"ஐயோ !",என ஒரு சத்தம் .
"டேய் எருமை மாடு ", அதைத் தொடர்ந்து .
என் தமையனின் குரல் அது .

அப்போது உணர்ந்தேன் ,
இதுவரை நான் கண்டது கனவு ..

Friday, October 21, 2011

கண்ணீரின் எழுத்துக்கள் ..!





சில எழுத்துக்கள்
படித்தாலே புரிந்துவிடும்
அவை கண்ணீருக்கு
சொந்தமென ..

மனித உணர்ச்சியால்
உண்டான கிளர்ச்சியால்
உண்டான கண்ணீர் பிரசவிக்கும் 
எழுத்துக்கள் யாவும் உணர்ச்சியின் பாரம் தாங்க முடியாமல்   
சோகத்தின் நிழலில் ஓய்வெடுக்கிறது  ..

அந்த எழுத்துக்களை
படிக்கும் ஒவ்வொரு நொடியும் ,
எழுத்துக்களுக்கு
சொந்தமான கண்ணீரின் ஈரம்
நெஞ்சில் பிசுபிசுக்கும் ..

Wednesday, October 19, 2011

தவறான கவிதை ..!




ஒரு தவறான கவிதை எழுத எண்ணினேன் ,
ஒரு நாள் தவறாக ..
எதைப்பற்றிச் சரியாக
தவறாக எழுத முடியும் என
யோசித்தேன் ...
பின்பு தெரிந்தது
நான் தவறாக யோசித்தது
சரியானது என ...
இப்போது சொல்லுங்கள்
இதுதானே மிகச்சிறந்த
தவறான கவிதை ...

பூமியை வாழவிடு ....!



மானுடமே,
நீ மறந்து போகிறாய் ..!
தாயின்
கருவறையில் இருந்து கொண்டே
நீ கருவறையைச் சிதைக்கிறாய் ..

கருவே
கருவறையை
சிதைக்கும் கொடுமை இங்கே நடக்கிறது ..
என்றைக்கும்
பிள்ளை மனம் கல்லாகக் கிடக்கிறது ..

தலைசுற்றிக்கிடக்கும்
பூமியின்
தலையெடுக்கப் பார்க்கிறாய் ..

பூமியை அட்டையாய்
உறிஞ்சுகிறாய் ,
நீருக்கும்
கச்சாவுக்கும் ..

புகை பிடிக்கும்
தொழிற்சாலைகள் ,
பூமிக்குப் புற்றுநோயாம்
ஓசானில் ஓட்டை ..

கடவுளை அளக்க
அணுவைப் பிளந்தான்
அணுகுண்டின் பேரழிவு ..

நதிநீர் கொண்டு
வளர்த்தப் பயிர் மறைந்து
அதில் மணல் கொண்டு
விதைக்கிறாய் கட்டிடம் ..

உன்சுயநலத் திடலில் ,
பூமிப்பந்தை
பந்தாக
பந்தாடுகிறாய் ..

வான் மழையும்
அமிலத்துளியாய்
மாறிப்போனது ...

மரத்தை வெட்டி விட்டு
குளிர் காற்றுப் பெட்டியில் வாங்கி
வீட்டிற்குள் மாட்டப்படுகிறது ..
வளிமண்டலக் காற்றில்
நஞ்சு ஏற்றப்படுகிறது ..

பூமியை சூடாக்கி
துருவங்களின்
உருவங்களை மாற்றி
வாட்டி எடுக்கப்படுகிறது ..

உயிரியல் கூட்டுக்குடும்பத்தில் ,
தனியாகச் சுயநலம் ஆட்டம் போடும்
மானுடமே ,
பூமி உன் குடும்பச் சொத்தல்ல ..
அது பொதுச் சொத்து ..

உன் தலைமுறைக்கு மட்டும் அல்ல ....
இனி வாழும் தலைமுறைக்கும் ..

நீ வாழு ,
பூமியை வாழவிடு ..

மானுடமே,
நீ மறந்து போகிறாய் ,
தாயின் கருவறையில் இருந்து கொண்டே
கருவறையைச் சிதைக்கிறாய் .. !

Monday, October 17, 2011

நிலைத்துக்கொண்டிருக்கும் மாறுதல்.!





மாற்றத்தின் மாறுதலை
மாற்றி வைத்து
அதை நிலைக்க வைக்க
நினைக்கிறேன் ..

அது தன் நிலையில்
நிலைத்துக்கொண்டு இருக்கிறது ,
ஆனால்
எப்போதும் மாறுகிறது ..

எப்போதும் மாறுகிறது ,
ஆனால்
தன் நிலையில் நிலைக்கிறது ..

Saturday, October 15, 2011

அழுகைக்குப் பிறந்த சிரிப்பு…!





மகனே,
நீ பிறக்கையிலே
உனது அழுகைக்கு
பிறக்கிறது..
எனது சிரிப்பு…!





கையேந்தும் தர்மங்கள் ..!




மின்சார இரயிலில்
இரயில் சத்தத்தையும் தாண்டி
வறுமையின் சத்தம் வருகிறது,
சில்லறையோசையில் கனத்தக் குரலில் பாடும்
குருட்டுப் பிச்சைக்காரனிடம் இருந்து 
காதுகளில் பொத்தப்பட்ட
பாட்டுப் பொட்டியின் சத்தத்திடம்,
வறுமையின் சத்தம் தோற்றுவிடுகிறது ..

அங்கு நம் கண்களும் குருடாகிறது ,
மனது சிறைப்பட்டு
இருளில் அடைப்படுகிறது ,
இங்குத் தர்மம்
இருட்டில் விடப்படுகிறது ..

நடைபாதையில் கைபேசியில் 
பேசிக்கொண்டு போகையில் 
ஒரு கைபிடித்து
யாசகம் கேட்கிறாள் சிறுமி ,
ஒருவேளை உணவாகும் என்ற
நம்பிக்கையில் ..

அந்தப் பிஞ்சு கைகள் 
தட்டி விடப்படுகிறது ,
இங்குத் தர்மம்
கைவிடப்படுகிறது ..

சுரங்கப்பாதையில் ,
பிச்சைக்காரன் மடியில்
உறங்குகிறது குழந்தை ..
பால்குடி மறவா பிஞ்சுக்கு
போதை நெடியும் ஏற்றப்படுகிறது ..

உறக்கத்தில் இருக்கும்
குழந்தை என்ன கனாக் காண்கிறது?
உறக்கத்தில் இருக்கும்
தன் வாழ்வு விழித்துக்கொள்கிறது என்றா ?இங்குத் தர்மம்
கனா காண்கிறது ..

கோயில் வாசலில்
கால் ஊனமான
ஒரு பிச்சைக்காரனிடம் இருந்து
TASMAC குடிமகனால்
சில்லறை பிடுங்கிக் கொள்ளப்படுகிறது ..
இங்குத் தர்மம்
கொள்ளையடிக்கபடுகிறது..

நள்ளிரவில்
ஒவ்வொரு பிச்சைக்காரனிடம் இருந்தும்
சில்லறைகள் எடுக்கப்பட்டு
உணவுப் பொட்டலங்கள்
போடப்படுகிறது ..

இவை அனைத்திற்கும்
முத்தாய் வருகிறது ,
இங்குத் தர்மம்
வியாபாரம் ஆக்கப்படுகிறது ..

Thursday, October 13, 2011

நிழல் ..!






எதிர்படும் இடங்களில்
என் நிழல்கள் பிறக்கிறது
ஒளிகளிடம்..

என் மீது மோதி
சிதறிய
வெளிச்சம்
என்னைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது ..

ஒளி முட்டியதில்
நான் விழுந்து விடுகிறேன்
நிழலாக ..

ஒளி என்னை
வென்று வீழ்த்திவிட்டு
என்னைக் கடந்து போகிறது ...

Wednesday, October 12, 2011

பேனாவின் மறதி ..!



எழுத்தொளி தந்து
கரைந்தொளிந்து ,
மனிதன் மனதின்
எண்ண ஓட்டத்தை
காகிதச்சுவரில்
ஒட்டிவிடும் மந்திரக்கோல்
பேனா ..
சில நேரம்
மந்திரகோல்
செயலிழந்து போகும் ..

மந்திரக்கோலையே 
மந்திரம் செய்யும்
வித்தைக்காரன்
சூழ்நிலை ..

இறந்து போன தாய் ;
செய்தி சொல்ல கடிதம்
எழுதும்போதும்  ..

படிக்காத தேர்வு ;
தேர்வறையில்
கேள்வியின்
பதிலை எழுத
முயலும் போதும் ..

யுத்தத்தின் முடிவு ;
எதிரியிடம்
தோல்வியை
ஒப்புக்கொண்டு
கையொப்பம் இடும்போதும் ..

சொல்லாமல் போன காதல் ;
தோழியின் திருமணத்தில்
வாழ்த்து மடலில்
வாழ்த்தும்போதும் ..

அவசரப்பிரிவில்
நேசத்திற்குரியவர் ;
மருத்துவ மனை
அவசரச சிகிச்சைக்காக
கையொப்பம் போடும்போதும் ..

சில நேரம்
வார்த்தைகள்
எண்ணத்தோடு
சண்டையிடும் பொழுதும்
பேனாவிலிருந்து
வெளிவர மறுத்தன
வார்த்தைகள் ..

Monday, October 10, 2011

பூசை ..!








விநாயகர் சதுர்த்தியன்று
பிள்ளையாருக்கு
படைக்கப்பட்ட கொழுக்கட்டையை
பூசை செய்யும் முன் எடுத்து உண்டான்
அந்த வீட்டுச் சிறுவன் ..

சிறு பிள்ளை
உண்டதற்காகப் பிள்ளையார்
கோபப்படவில்லை..

அந்தப் பிள்ளையின் தாய்
கோபப்பட்டாள்..

பிள்ளையாருக்குப் பதிலாக
தன் பிள்ளைக்குப் பூசை செய்து கொண்டிருந்தாள் ..

அந்தப் பூசையைப் பார்த்த பிள்ளையார் ,
அரண்டு போய்
கொழுக்கட்டையையே பார்த்துக்கொண்டு இருந்தார் ..!


Sunday, October 9, 2011

சிசு கொலை ..


நிறைமாதக் கர்ப்பிணி
பூவின் பிரசவக்காலம்
தினந்தோறும் காலையில்
காற்றின் உதவியுடன்
பிரசவிக்கிறாள் பூ ,
தன் பிள்ளையான
வாசத்தைப் பூமிக்கு ...

பிறந்தவுடன் கையேடு அழைத்துச் செல்கிறது
தன் வாசப்பிள்ளையை ,
காற்று ஊரெங்கும் ...

ஆனால் ,
ஊருக்குள் அரக்கன் இருக்கிறான்
அவன்
புகையாக
காற்றின் பகையாக
இருக்கிறான் ...

செய்தியறிந்தக் காற்று ,
செய்வதறியாது திகைத்தது...

தன் பிள்ளை வாசத்தோடு
அங்கும் இங்கும் அலைந்தது ...

காற்றையும்
வாசத்தையும்
பார்த்த பகைவன் ,
புகையாக மாறி 
கொலை செய்தான் ...

வாசம் இறந்து கிடந்தது ..
தந்தை காற்று ,
ஓவெனக் கரைந்து அழுது வீசியது ..

இப்படியாக
பிரசவமும்
பச்சிளம் குழந்தை வாசத்தின் மரணமும்
தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது ..

Wednesday, October 5, 2011

மெழுகுவத்தி ..!





மழைக்காலத்தில் ,
மின்சாரம் துயில் கொள்ளும் நேரத்தில் ,
இருட்டில்
குத்துவிளக்கிற்குச் சக்களத்தியாக
வந்து வீடெங்கும் வாழும்
மெழுகுவத்தி நீ ..

தேவாலயங்களில்
எங்கள் பிரார்த்தனை
ஒளிக் கொடுக்கும் நீ ,
கோவிலில் மட்டும்
அந்நியப்பட்டுப் போனாய் ..

அந்நியமாகிப் போனாலும்
எங்கள் வீட்டில்
ஒளிக் காட்டுகிறாய் ,
வழிக் காட்டுகிறாய் ...

தனிமையில் உருகி
திரியில் கருகி
யாரையோ எண்ணி
கண்ணீர் வடிக்கிறாய் ..

உன்னை அழவைத்து
உருகவைத்து
கரையவைத்து
வெளிச்சம் காண்கிறோம்
தேவனிடமும் கேட்கிறோம்
பாவ மன்னிப்பு ..

தேவன் மன்னிப்பாரா?
இந்தப் பாவ மன்னிப்பை..

Tuesday, October 4, 2011

எதிர்மறை ..!






பலர் நோய்களில் சிலரின்
ஆரோக்யமான வாழ்கை
மருத்துவர் -நோயாளி
சிலர் சோம்பலில்
பலரது சுறுசுறுப்பான வாழ்கை
- சலவைத் தொழிலாளி

கர்வம்..!



பொழுது விடிந்ததில் ,
அந்தச் சேவலுக்கும்
சூரியனுக்கும்
சண்டையாம் ..
நான் எழுந்ததால்
நீ கொக்கரிதாய்
எனச் சூரியனும்,
நான் கொகக்கரித்ததால்
நீ எழுந்தாய்
என்று மாறி மாறி
மோதிக்கொண்டன ..
அதன் பின் சேவலோ
சண்டையை விட்டு விட்டு
கோவில் கூட்டத்தோடு
செல்லத் தயார் ஆனது ..
அந்தச் சேவல் இங்கு வந்த
நாள் முதல்,
தான் கடவுளுக்கு
என மமதையோடு
அலைந்து வந்தது ...
பொழுது போனால் உணவு ,
பாதுகாப்பான உணர்வு ,
இப்படி வாழ்ந்த சேவலுக்குத் தெரியாது
இன்று தான் சூரியனோடு தனக்கு
கடைசிச் சண்டை என ..
சேவல் மமதைக் கூடி ,
தான் கடவுளுக்காக என்பதை மறந்து
தான் கடவுள் என எண்ணியது ...
கடவுளை திருவிழா அன்று
காணப் போகிறோம் என்ன எண்ணி
தான் இறப்பதை மறந்தது ..
கோவில் செல்லும் புறப்பாட்டின்
தொடக்கமாகச் சகல மரியாதையுடன்
கொண்டுவரப்பட்டது சேவல்..
தலைகீழாகத் தொங்க விடப்பட்ட போது ,
"பாத்து அது சாமிக்கு நேர்ந்தது ", என ஒரு குரல்..
அந்தக் குரல் சேவலின் கர்வத்தை
மேலும் உயர்த்தியது ..
குங்குமம் இட்டு ,
பூச்சூடி,
மஞ்சள் நீராட்டி
எனச் சகல மரியாதையும் சேவலுக்குத் தொடர்ந்தது ..
அதன் பின் தொடர்ந்த
நிகழ்வில் புரிந்ததுசேவலுக்குத் தான் யார் என ..
மேலே தூக்கி
கீழே இறக்கப்பட்டது ,
கழுமரத்தில் சேவல் ..
கழுமரத்தில் 
அகப்பட்ட சேவல்
வேதனையோடு
தான் நிலைமை எண்ணி இறந்தது ..
இறப்பதற்கு
சில நொடிகள் முன்புதான்
உணர்ந்தது ,
கடவுளுக்கு நேர்ந்தது
என்ற வார்த்தையின் உண்மை அர்த்தத்தை ..   

Sunday, October 2, 2011

குருட்டுத் தர்மம் ..!





சில நேரங்களில்
குருட்டுப் பிச்சைகாரனிடம்
குருடனாக நடந்து கொள்கிறது
தர்மம் ..!

முரண்பாடு ..!





எதுகை இல்லை ,
மோனை இல்லை ,
புதுக்கவிதை
இலக்கணத்தின்
முரண்பாடு ..

கண்ணீர் உண்டு
ஆனால் துக்கமில்லை ,
உணர்ச்சியின்
முரண்பாடு ..

காக்கைக் கூட்டில்
முட்டையிடும் குயில் ,
தாய்மையின்
முரண்பாடு ..

புண்ணிய நதியை
அசுத்தமாக்கும் மனிதன்
நம்பிக்கையின்
முரண்பாடு ..

சாமியை மறந்து
சாமியாரை வணங்கும்
மனிதன் பக்தியின்
முரண்பாடு ..

நிகழ்காலம்
வரும்காலத்தின்
கடந்தகாலம் என்றால்
அது காலத்தின்
முரண்பாடு ..

நட்பும் இல்லை
காதலும் இல்லை
எந்த உறவிது
பருவத்தின்
முரண்பாடு ..

எழுத்து இல்லை ,
இலக்கணம் இல்லை ,
வார்த்தை இல்லை
விழி பேசும் மொழி ,
இது மொழியின்
முரண்பாடு ..

வெளிச்சத்தில்
தொலைந்து போகும்
இருள்
வெளிச்சத்தின்
முரண்பாடு ..

நினைக்காமல்
நினைக்க வைக்கும்
ஞாபகங்கள்
நினைவுகளின்
முரண்பாடு ..

சொல்லாமல் புரியும்
வார்த்தை
பேச்சின்
முரண்பாடு ..

முடிவில்லாமல்
முரண்படும் இந்த
முரண்பாடு
முரண்பாட்டின்
முரண்பாடு ..