Sunday, January 29, 2012

ஒரே பார்வையும் ஒரே ஒரு புன்னகையும் ..!






ஒரே பார்வை தான் ,
ஒரே புன்னகை தான் ,
ஆனால்
எத்தனை ஜாலங்கள் செய்கிறது ...

பல்வேறு சூழ்நிலைகளில்
பல்வேறு தருணங்களில்
பல்வேறு காலங்களில்
எத்தனை உணர்ச்சிகளுக்கு
தாயாகிறது ...

முதல் பார்வையில் ,
மயக்கம் 
பரவசம் 
வெட்கம் 
தயக்கம் 
வியப்பு  சந்திப்பு ...

ஒவ்வொரு சந்திப்பிலும் ,
பூரிப்பு 
சிரிப்பு 
மகிழ்ச்சி 
ஆறுதல் 
ஆசை  ...

ஒவ்வொரு ஆசையிலும்  ,
மோகம் 
தாகம் 
காமம் தணியாத காதல்  ...

ஒவ்வொரு காதலிலும்  ,அன்பு மகிழ்ச்சி
உடைமையுணர்வு 
பயம்
ஊடல்  ...

ஒவ்வொரு ஊடலிலும் ,
கோபம் 
சோகம் 
திகைப்பு 
மோதல் கூடல்  ...

ஒவ்வொரு கூடலிலும்,இன்பம்
உச்சம்
களிப்பு
 மகிழ் மிகு கண்ணீர் முன்னம்  விட
அதிகக் காதல்  ..

இறுதிச் சந்திப்பில் ,
அதிர்ச்சி 
திகைப்பு 
காயம் 
தனிமை  ...

தனிமையில்,
சிரிப்பு 
சோகம் 
வலி  மிகு கண்ணீர் 
வெறுமை  நினைவுகள் ...

ஒரே பார்வை தான் ,
ஒரே புன்னகை தான் ,
ஆனால்
எத்தனை உணர்வுகள்  ...!

Friday, January 27, 2012

அலைகளின் பேச்சு






கரை தொட்டு
பின் செல்லும் அலைகள் 
எதோ ஒன்றை
கரையில் 
நுரையாய் எழுதிச் செல்கிறது ..

எழுதிச் செல்லும் பொழுது
ஏதோ ஒன்றை கரையிடம்
சத்தமாகச் சொல்லி விட்டுச்  செல்கிறது ..

அந்த
அலைகளின் எழுத்துக்களை
படித்துவிட முயற்சிக்கிறேன் ..
புரியவில்லை ...

அந்த
அலைகளின் சத்தத்தைக் கேட்டு
அதன் மொழியை
புரிந்து விட முயற்சிகிறேன்
விளங்கவில்லை ..

தரையாக இல்லாததால்
என்னவோ
அதை
படிக்கவோ
கேட்கவோ முடியவில்லை ..

முயன்றுப் படிக்கும் பொழுதுகளில் 
அந்த எழுத்துக்கள் யாவும்
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு அர்த்தம் தருகிறது

ஒவ்வொரு முறை
அந்தப் பேச்சைக் கேட்கும் பொழுதும்
அது வெவ்வேறாக ஒலிக்கிறது ...

சிறிதாய் எழுத்துக்கள்
புரிந்த வேளையில்
அலைகள் வந்து அதை அழித்துவிட்டு
புதிதாக எழுதிச் செல்கிறது ...

சற்று 
புரியும் பொழுது 
அது தன் பேச்சை
நிறுத்திக் கொள்கிறது  ...

கடைசிவரை அலைகளின்
பேச்சும் எழுத்தும்
புரியவில்லை ..

உலகிலிருக்கும் பல்வேறு
புரியாத மர்மங்கள் போல்
இந்த
பேச்சும் எழுத்தும்
மர்மமாகவே உள்ளது ...!

Monday, January 2, 2012

மௌனத்தின் சத்தங்கள் ...!







மௌனம் சத்தம் போடுமா ?
சற்று மௌனமாகச் சிந்தித்ததில்
அது ஆம் என்றது சத்தமாக ..

என்னை விட்டுப் போய்விடுவாயா ?
எனக் காதலியிடம் கேட்டக் கேள்விக்கு
பதிலாய் வந்த மௌனம்இன்றும் மனதில் சத்தம் போடுகிறது ...

எம் இன மக்கள்
எட்டிய தூரத்தில் இருந்தும்
கொத்து கொத்தாய்ச் சாகையில்
இங்கு அமைதி காத்த மக்களின் மௌனம்
ஈழத்தில் குழந்தையின் அழுகையாய்க் கேட்கிறது ..

பேச வேண்டிய தருணங்களில்
நான் காத்த மௌனங்களே
இன்று வரை நினைவில் சத்தம் போடுகிறது ..

நான் திட்டிப் போன வேளையில்
மௌனம் காத்த தந்தையின் மௌனங்கள்
என்னைச் சத்தமாகக் குத்திக் காட்டுகிறது ..

உயிரெனக் கலந்த உறவுகள்
உயிரற்றச் சவமாகக் கிடக்கையில்
என்னில் கண்ணீராய்ச் சத்தம் போடுகிறது ..
இப்பொழுது சொல்லுங்கள்
மௌனம் சத்தம் போடும் தானே ..