Saturday, March 17, 2012

இமைக்க மறந்த விழிகள் ...!




அந்தக் காட்சி ,
கடந்து போன ஒரு நொடியில்
என் இமை பிடித்து நிறுத்தி விட்டது ..
பதியம் போட்ட நெல்மணியாய்
நெஞ்சில் பதிந்து விட்டது ..

அந்த அழகை
என்ன வென்று சொல்ல ...
அழகுக்கு உவமைச் சொல்லும்
அழகு அது ..
எந்தக் கல் நெஞ்சும்
அதைக் கண்டால்
இலகும் அதில் ..

என் விழிக்குள் இருக்கும்
கருமணிகளும் சிறு குழந்தையென
துள்ளி விளையாடியது
அந்த அழகை ரசிக்கையில் ...

கருப்புக் கல் பதிந்த வெள்ளி
மோதிரமாய்க் கண்கள் ..!
பூவின் புன்முறுவலாய்
மெல்லிய சிர்ரிப்பு ...!
காற்றின் சொல் கேட்கும்
பூவாய்த் தலை யாட்டு ..!
கோபம் காட்டிச் சிவக்கும்
அழகிய மூக்கு ..!
பூச்சூடும் பூவாய்
அவள் அணிந்தப் பூ ..!
காற்றில் ஓவியம்
வரையும் அழகிய விரல்கள் ...!
சிரிப்பாய் இசைத்து வரும்
காம்போதி ராகம் ..!

இப்படி
இமைக்க மறந்த விழிகள்
அனைத்தையும் மறந்தன
அந்தக் குழந்தையின் புன்சிரிப்பை
ரசிக்கையில் ...!

Wednesday, March 14, 2012

இரத்த உறவுகளுக்கு வேண்டுகோள் ...!





குற்றம் யார் செய்தாலும்
தண்டனை உண்டா ?
இல்லை அரசியல் என்று வந்து விட்டால்
குற்றத்தின் தண்டனைக்குத் தான் தண்டனையா ?

உன் கண் முன்னே
உன் உறவுகளை இழந்து இருக்கிறாயா ?
எங்கள் வலி தெரியும் ...
செல்லடிப் பட்டு வெந்துப் போய்
கை கால்கள் இழந்து இருக்கிறாயா ?
எங்கள் ரணம் புரியும் ...
அடிப்பட்டு மருத்துவமனையில் இருக்கையில்
குண்டு மழைப் பொழிந்திருக்கிறதா ?
உந்தன் மனமும் வலியில் அழும் ...
பிஞ்சு பிள்ளை பசியால்
பல நாள் அழுது இருகிறதா ?
உன் கல் மனமும் கரையும் ...
சிறு பிள்ளை நெற்றிப் பொட்டில்
துப்பாக்கி வைத்துக் கொல்லப் பட்டிருக்கிறதா ?
பெண்களின் கொடுமைகளை
வார்த்தைகளில் வடிக்கையில்
எழுத்துகளும் கண்ணீர் சிந்துகின்றது ...

மனித நேயம் அற்ற
இத்தனை செயல்களும்
புத்தன் செய்யச் சொல்ல வில்லை ...
அத்தனையும் புத்த தேசத்தில் நடந்தது ...
அத்தனை இரத்த உறவுகளுக்கும் ,
கை எட்டும் தூரம் இருந்தும்
இரதம் சிந்துவதைக் கண்டு
கை பிசைந்து கிடந்தது ...

இனியும்
எங்கள் கண்ணீரை
நீங்கள் துடைக்க வேண்டாம் ...
எங்கள் கண்ணீரைத் துடைக்க வரும் மற்ற கரங்களையும்
நீங்கள் உடைக்க வேண்டாம்...!



Friday, March 9, 2012

நான் எழுதும் கவிதை உனக்குப் புரியாது ...!







நான் எழுதும் கவிதை
நிச்சயம்
உனக்குப் புரியாது 

என் மனக்கண்ணாடியை
அணிந்து பார்த்தாலும் தெரியாதுஎன் மனக்காட்சிகள்
எனக்கே சரியாக
தெரியாத நிலையில்
அதைப் படம் பிடித்து
கவிதையாய்ப் படைக்கையில்
உனக்கு மட்டும் தெரியுமா ?
எனது கவிதை புரியுமா ?

என் கவிதை புரியாததால்
நான் வருத்தப்பட முடியாது ...

என் வருத்தங்களை
கவிதையாய்ப் படைக்கையில்
அதுவும் பிறர்க்குப் புரியவில்லையென
வருத்தப்பட மாட்டேன் ...

என் சிந்தையில்
சிந்தியவைகளை
எழுத்துக்களாய் கோர்த்து
நினைவுகளை வார்த்து
உணர்ச்சிகளைச் சேர்த்து
கவிதை தூரலாய்த் தூவுகிறேன் ...

அந்தத் தூறலில்
நனைவது
உனக்குப் பிடிக்கவில்லை என்பதால்
எனது கவிதை தூறல் நின்று விடாது ...

என்ன செய்வது ,
உடையும் நிலையில் இருக்கும்
அணையின் மீது பெய்யும்
கார்கால மேகம் போல 
சில நேரம் எனது கவிதை...

மீண்டும் சொல்கிறேன்
நான் எழுதும் கவிதை
நிச்சயம் உனக்குப் புரியாது ...