Saturday, February 15, 2025

நட்சத்திரங்களின் வருகை

 




சூரியனாக இருந்த உன் அன்பின் வெளிச்சம்

நிலவாக என்னை வாழ வைத்தது

ஒரே வானில் என்றும் சேர முடியாத நமது பெருவாழ்வு

கிரகணத்தின் சில கணத்தில் மட்டும் விதிவிலக்கு


திடீரென மெல்ல மெல்ல விட்டு விலகி

தொலைதூர நட்சத்திரமானாய்

பின்பு ஒரு நாள் மின்சார வெளிச்சத்தில் தொலைந்தும் போனாய்

இந்த வெளிச்சம் மட்டும் ஏன் என் வாழ்வை இருட்டடித்தது ?


உன் ஒளி குடித்துப் பழகிய நிலவு நான்

வேறு ஆயிரம் நட்சத்திரங்களின் வருகையும்

என்னை நிரப்புவதில்லை

பல ஒளி ஆண்டுக் கடந்த பின்னும்

உனது வெளிச்சம் என் நெஞ்சில் குறையவுமில்லை


வானில் எங்கும் உன்னைத் தேடியபடிக் கரைகிறேன்

இருட்டில் தொலைத்ததை வெளிச்சத்தில் தேடலாம்

வெளிச்சத்தில் தொலைத்ததை எதில் தேட?