ஒரு வீட்டுக்குள்
குடி கொண்டு
அனாதையாய் வாழ்ந்து வந்தேன் ..
குடிகொண்டது
மொத்தம்
பத்து மாதம் ..
கிட்டத்தட்ட
அது தனிக்குடித்தனம் ..
குடிகொண்ட நாள் முதல்
வாடகை தந்ததில்லை ..
பாசமாக
உன்னுள் வைத்து
உபசரித்து
பாத்து மாதம் கழித்து
வெளியே தள்ளிவிட்டு
அழவைத்த
கொடிய பாசக்காரி ..
உன் அன்பில் மயங்கி
வாடகைத் தர மறந்திருப்பேன் ..
அதற்காகவா
வெளியே தள்ளி விட்டாய்?
உன் செயலால்
எனக்குக் கோபம்..
பழி தீர்த்தேன் ,
உந்தன் வயிற்றில்
எட்டி உதைத்து
நீ என்னை வெளியே
தள்ளிய வேளையில் ..
உந்தன் தண்ணீரில் இருந்து
எந்தன் கண்ணீருடன்
வெளிவந்தேன் ..
உன்னுள் இருந்த வரை
காற்றுத் தீண்ட
அஞ்சியது ..
ஒளி தொட யோசித்தது ..
வேலையில்லை,
ஒரே வேலை தூக்கம்..
சில நேர விழிப்பில்
தூக்கத்திற்கு ஓய்வு ..
தனியாக இருந்தேன்
உந்தன் துணையோடு ..
சற்றுக் குழம்பிப் போனேன்,
இங்கு எல்லாம்
தலைகீழ் ..
என்னைத் தள்ளி விட்டாய்
அதனால் எல்லாம்
தலைகீழாக
மாறிவிட்டதோ ?
பயமாயிருந்தது ,
வெளிச்சம்
கண்டு இமைத் திறக்க
விழிகளும்
அஞ்சியது ..
என்னைச் சுற்றி பலர் ,
யாரை நம்புவேன் நான்..
அங்கும் இருந்தாய்
எனக்காக நீ..
இருளில் சென்றால்
நிழலும் பயந்து
மறைந்து ஓடும் ..
நீயோ இருளில் ஒளியாக
வெளிச்சத்தில் வழியாக
இருந்தாய் ..
என்னை நீ முத்தமிட்ட
முதல் கணம்
உன்னைப் பிடித்துப் போயிற்று ..
அப்போதுணர்ந்த
உந்தன் வெப்பம்
உந்தன் சுவரிசம்
நான் சேமித்த பொக்கிஷங்கள் ..
அவை உன்னைக் கூட்டத்தில்
காட்டிக் கொடுக்கும் ஆட்காட்டி ..
குருதியை பாலாகத் தந்து
உருதியாக்கியவளே..
நீ கொடுமைக்காரி
பாசமழையில்
பச்சைக் குழந்தையை
நனைய வைத்த
கொடியப் பாசக்காரி ..
எனக்கே புரியாத
அழுகை மொழி
உனக்கெப்படி புரிந்தது என்று
புரியவில்லை ..
அழுதிடும்
முதல் கணமே,
பசியறிந்து பாலூட்டி
ஓய்வறிந்து தாலாட்டி
நோயறிந்து குணமாக்கி ..
விழிகளில்
கண்ணீர் வழிந்திட்டால்
உன் நெஞ்சில்
வெந்நீர் உணர்ந்திட்டாய் ..
உன் வாய்மொழியில்
உணர்ந்தேன்
என் தாய் மொழியை ..
தவழ்ந்த போது
உன் கையைப் பிடித்து
நடைப் பழகிய போது ,
அம்மா என
உன்னை அழைத்த போது
உன் மகிழ்ச்சிக்கு இணை இல்லை,
அதை எழுதிட வானமே எல்லை ..
நீ ஊட்டும்
பால் சோற்றிடம்
யாசிக்கும்
தேவலோக அமுதமும் ..
நோயுற்றால்
உன் அன்பிடம்
யாசிக்கும்
குணமாக்கும் மருந்தும்..
நீ பாடும்
தாலாட்டிடம்
யாசிக்கும்
சப்தசுவரங்களும் ..
சோகமாக
உன் மடியில் படுத்தால்
வேகமாக
சொர்க்கமே வந்து
மகிழ்வித்திடும்..
கடவுள் யார் என
அடையாளம்
காட்டும்
என் கடவுள் நீ ..
மந்திரங்களும்
செய்யும் ஜாலங்களும்
தோற்றுபோகும்,
எக்காலமும்
எல்லோரும்
முதன் முதலில்
சொல்லும் மூன்றெழுத்து
மந்திரம்
-அம்மா ..!
No comments:
Post a Comment