கவிதை,
பல நேரம்
இரவில் விழிக்கும் ..
கவிதை,
அமைதியான மனதில்
சத்தம் போடும் ..
கவிதை,
ஒரு கழுதைப் போல
நினைவுகளைச் சுமக்கும்
திடீரென எட்டி உதைக்கும்
இலக்கியக் காகிதங்களைத் தின்னும் ..
கவிதை,
மனதோடு உறவாடி
நினைவோடு ஒளியும் ..
கவிதை,
மனதோடும் என்னோடும்
கண்ணாமூச்சி ஆடுகிறது
அதைக் கண்டு பிடித்தால்
எழுத்தாய் வார்த்தையாய் மாறும் ..
கவிதை,
நிலவோடும்
பெண்ணோடும்
அதிகம் உறவாடும் ..
கவிதை,
ஆண்களைப் போல்
அழகில் மயங்கும் ..
கவிதை
பெண்களைப் போல்
எத்தனை முறை படித்தாலும்
புரியாமல் போகிறது ..
கவிதை,
பொய் பேசும்
சந்தம் பாடும்
மரபு நவீனம் புது என பல வேடம் போடும் ..
கவிதை..
இசையோடு மாலை சூட்டும்
பாடலை பிரசவிக்கும் ..
கவிதை
கடவுளையும் மயக்கும் ..
கவிதை
சிந்தையில் வார்த்தைகள் நோக்கி
நினைவுகளை வேள்வியாக்கி
ஒரு கவிஞன் இருக்கும் தவம் ..
கவிதை
எண்ணங்கள்
எழுத்துகளில் ஆடும்
அழகிய நாட்டியம் ..!