Tuesday, March 25, 2014

ரௌத்திரம் பழகுவோம்








ஆத்திரம் பிறக்கட்டும்
ரௌத்திரம் பழகுவோம் ..

அரசியல் காட்டில்
ரூபாய் நோட்டு போட்டு
வோட்டு வேட்டையாடும்
மூடர் பாத்திரம் கண்டால் ..

ஆத்திரம் பிறக்கட்டும்
ரௌத்திரம் பழகுவோம் ..

கொள்கைகளை நோட்டில்
மட்டும் ஏற்றிவைத்து
காந்தியமும்
காந்தி நோட்டில் பூட்டிவைத்து
வீதியெங்கும் கொள்கைவீரர்
பேசும் சாத்திரம் கேட்டால் ..

ஆத்திரம் பிறக்கட்டும்
ரௌத்திரம் பழகுவோம் ..

கோடிகளை
அந்நிய மண்ணில் விதைப்பார்
ஆட்சி அதிகாரத்தில்
ஊறித் திளைப்பார் ..
நியாங்கள் பேசும்
விசித்திர தலைவர் கண்டால் ..

ஆத்திரம் பிறக்கட்டும்
ரௌத்திரம் பழகுவோம் ..


ரூபாய் நோட்டுக்கு
கல்வி நோட்டு
தரும் பள்ளிக்கூடம் ..
லட்சங்களை
லட்சியமாய்க் கொண்ட
பல்கலைக்கழகம் ..
கல்வியை வியாபாரமாக்கிய
கல்வித்தந்தைகள் கண்டால் ..

ஆத்திரம் பிறக்கட்டும்
ரௌத்திரம் பழகுவோம் ..

சாதியம் பேசி
சங்கங்கள் வைத்து
ஓட்டு வங்கி கூட்டி
தங்கள் காரியம் சாதிப்பார்
சண்டைச் சச்சரவுகளை
பெருமையாய் போதிப்பார்
சாதித்தீயில் குளிர்காயும்
வீணர்கள் கண்டால் ..

ஆத்திரம் பிறக்கட்டும்
ரௌத்திரம் பழகுவோம் ..



Friday, March 21, 2014

ஏரி ..







அமைதியை தன்னுள் நிரப்பி வைத்து
அமைதியாகக் காற்றோடு
சலசலத்துக் கொண்டிருக்கிறது எரி ...

ஊரின் ஓரம்
அழகாக அமர்ந்திருக்கிறது
தவம் செய்யும் ஒரு
முனி போல ..

கடலோடும்
காதலில்லை
அமர்ந்த இடம் தாண்டி
போவதில்லை ..

மண் மீதும்
மழை மீதும்
தீராக்காதல் ..

மண்ணை
மணம் கொண்டு
படிதாண்டாய் ..

பெரு மழையின்
பெருங்காதலில்
மனம் மயங்கி
படி தாண்டி
நிலம் பூண்டாய்
பெருவெள்ளமாய் ..

இரவில்
நிலவின் சிறு
கைக்கண்ணாடியாய் ...

ஊரின் மழை
அத்தனையும் குடிக்க முயன்று
குடிக்க முடியாததை
வெளியே துப்ப முயன்று
தோற்றுப்போய்
தன்னுள் தேக்கி வைத்திருக்கிறது ..

Saturday, March 15, 2014

கடந்து போகமுடியாத தருணம் ...








இதுவும் கடந்துபோகும் என
கடந்து போகமுடியாத
ஒரு தருணத்தை
கடந்துகொண்டிருக்கிறேன் ..

அந்தத் தருணங்கள் யாவும்
தொடங்கியது முதலே மனதில்
வேரூன்றத் தொடங்கி விட்டது ..

அதன் ஒவ்வொரு கணமும்
ரணம் தருகிறது
அந்த வலிகள் யாவும்
புத்தியைக் கிலிப் பிடிக்கவைக்கிறது
புரிந்ததை
புரியாததைப் போல் நடிக்கவைக்கிறது

இறுதியில்
நியூட்டனின் மூன்றாம் விதியின்
தழை கீழ் விதியை
இந்தத் தருணம்காட்டியது ..

சுற்றி இருக்கும்
பிறரின் வாழ்கை மாறிப்போனதால்
அந்தத் தருணங்களை
நான் கடந்து போனதாகத் தோணலாம்

உண்மையில்
நான் அந்தத் தருணங்களை
கடக்கவில்லை
தருணங்கள் தான்
என்னைக் கடந்து சென்றது ..

காலம் கடந்து போனது
காட்சி மறைந்து போனது
மனம் மட்டும் ஏனோ தன்னுள்
தருணங்களை ஆயுள் கைதியாக்கி
எனக்கு உயிரோடு மரணத் தண்டனை விதித்தது