Friday, September 12, 2014

நிறம் மாறிய நிமிடங்கள்…







சில உண்மைகளின் உண்மை முகம்
பொய்யெனத் தெரிகையில் ,
நான் கடந்து வந்த தருணங்களை
என்னைக் கடந்து போன தருணங்களாக உணர்கையில் ,
மணமேடையில் வேற்றொருவனுடன்
அவளைக் கண்ட ஒற்றை நொடியில் ,
துரோகம் என் முகத்தில்
கருமை நிறம் பூசிய அந்த நொடியில் ,
பணமெனும் கண்ணாடியில்
உறவுகளின் உண்மை குணம் காண்கையில் ,
கடந்துவந்த, கடந்துபோன
காதல், பாசம், நட்பு, மனிதம்
எனப் பல நிமிடங்களின் நிறம் மாறிப்போகிறது..

அலைகளாக மனதின் எண்ணங்கள்
அதன் கரைகளாகக் காலங்கள் ..
போகிறபோக்கில் கரைகளின் வண்ணங்களை
அலைகள் அடிக்கடி மாற்றிப்போகிறது..

Tuesday, September 9, 2014

மிருகங்கள் ஜாக்கிரதை ...







வயிரின் பசித் தீர்க்க
உடலை வேட்டையாடும் மிருகங்கள்
காட்டில் உண்டு ..
காமப்பசித் தீர்க்க
உடல் வேட்டையாடும் மனித - மிருகங்கள்
இங்கு நாட்டில் உண்டு ..

மது உண்டு - மதி கெட்டு
குடி உண்டு - குடி கெட்டு
விழியிருந்தும் குருடாகி
போலியாய் முரடாகி
காமப் பசித் தீர்க்க
வேட்டையாடப் போகிறது மனித மிருகம் ..

பெண்பால் வேட்டையாடும்
மிருகம் மறந்து போனது
தான் தாய்பால் ருசித்தது
ஒரு பெண்பாலிடம் என்று ..

கருவில் இருந்தாள்
-சிசுவை அழித்தீர் ..
குழந்தையைக் கூட ,
ருசிக்குப் புசிக்க நினைத்தீர் ..

ஏனோ பெண்ணை மட்டும்
கருவறை முதல் பிணவறை வரை
நிம்மதியாய் விட்டு வைக்கவில்லை ...

என்னழகி ...






கார் மேகத்து நிறத்தழகி
மண்வாச சொல்லழகி ..
வெள்ளந்தி சிரிப்பழகி
மஞ்சல் பூசிய திங்கள் முகத்தழகி ..
குழந்தையா பழகும் அகத்தழகி..

இடமா உச்சியெடுத்த கூந்தல்,
என் உயிரைப் பிச்சியெடுக்கும்
இதழ் செங்காந்தள் ..

அவள் வளை பாடும்
இன்னிசை அலைகள் ..
அவள் முகபாவம்
ஒவ்வொன்றும் புதுக் கலைகள் ..

மையிட்ட கண்ணால்
பேசாமலே பல வார்த்தை சொல்வாள் ..
மௌனத்தை ஆயுதமாக்கி
பல நேரம் எனைக் கொல்வாள் ..

அவள் தொடுத்ததால்
அக்கூடையில்
மீண்டும்பூக்கள் பூத்தன ..
"போய் வா மச்சான் " , என
அவள் விடைகூறிய வார்த்தைகளே
எனை இன்றும் உயிரோடு காப்பன ..

பிழைப்புக்காக,
என்னவள் பிரிந்தேன்
வானம் பறந்தேன்
நாடு கடந்தேன் ..

எட்டா தூரம்
நீ இருந்தாலும் ,
பட்டுடுத்தி வாசல் வந்து
நீ வழியனுப்பிய காட்சி மறந்து போகல ..
மோனலிசா புன்னகையா
அப்போ உன்னோட சிரிப்பிக்கும் அர்த்தம் புரியல ..