Monday, October 2, 2023

கனவின் தேநீர் !

 




அம்மா போடும் தேநீருக்கு

குடும்பமே அடிமை அம்மாவைத் தவிர ..

அம்மாவின் தேநீர்ச் சுவைக்கு நிகரில்லாததால்,

வெளியிடங்கள் சென்றால்

அனைவரும் காபி மட்டுமே ..

எங்கும் அம்மா தேநீர் காபி அருந்தி

நாங்கள் பார்த்ததில்லை

அப்பா தவறிய பின்னர்

முதலாம் ஆண்டுக் காரியம் முடித்து

வந்திறங்கிய பேருந்து நிலையத்தில்,

அம்மா முதல் முறையாக

"ஒரு தேநீர் வாங்கிக் குடு" என்றார்.

அம்மா ஊதிக் குடித்த

அந்தக் கனவுத் தேநீரில்

அப்பா ஆவியாகிப்

போய்க் கொண்டிருந்தார்


எரியும் பனிக்காட்டில்

மாண்ட அடிமைகளின்

குருதியின் வாசத்தை

தாங்கள் ருசித்த தேநீரில்

முகர மறுத்தார்கள்

ஆண்டைகளும் ஆங்கிலேயர்களும் ..

ஆண்டுகள் ஓடியும் ஆட்சிகள் மாறியும்

அந்தக் குருதியின் வாசத்தை

யாரும் முகர்ந்ததாகத் தெரியவில்லை ..

ஊதிய உயர்வுப் போராட்டம் முடித்த கையோடு

தேயிலைத் தோட்டக் கூலிகள்

சாலையோரக் கடைகளில்

தேநீர் அருந்தினார்கள்

தேநீர் குடித்தவர்களில்

சிலருக்குக் குருதியின் சுவை

தெரியத் தொடங்கியது கனவில் ..

Saturday, September 23, 2023

வரம் - சாபம்..!



கண்ணாடிச் சன்னல் வழியே

தேநீரோடு இருக்கும் மழையும் 

சாலையோரக் குடிசையை

வியர்த்துக் கொண்டிருக்கும் மழையும் 

ஒன்றல்ல வெவ்வேறு ... 


கடற்கரையில் அரை நிர்வாணமாய்

சூரியகுளியல் தரும் ஞாயிறும்

குப்பை மேட்டில்

சிறுவனைச் சுட்டெரிக்கும் ஞாயிறும்

ஒன்றல்ல வெவ்வேறு ... 


கூதிர் கால அதிகாலையில் 

பஞ்சுமெத்தையில் நடுங்கவைக்கும் குளிரும்

பிளாட்பாரத்தில் கைலிக்குள்

 நடுங்கவைக்கும் குளிரும்

ஒன்றல்ல வெவ்வேறு ... 


வெள்ளைச் சோற்றை உண்ணமுடியாமல்

பங்களாவில் பத்தியம் இருக்கும் பசியும்

இருவேளை உணவில் ஒரு வேளையேனும்

சோற்றுக்கு மருகும் பசியும்

ஒன்றல்ல வெவ்வேறு ...


சென்னைக்கு மிக அருகில் எனக் கூறி

ஒரு குடும்பத்தின் கனவை 

காசாக்கும் பொய்யும்

மருத்துவ மனைவாசலில்

கண்ணீர் மல்க ஒன்றும் ஆகாது என

ஆறுதல் சொல்லும் பொய்யும்

ஒன்றல்ல வெவ்வேறு .. 


காதல் உச்சத்தில் 

தனியாகச் சிரிக்க வைத்த நினைவும்

காலப் பிரிவில்

கண்கள் கலங்க வைக்கும் நினைவும்

ஒன்றல்ல வெவ்வேறு .. 


வாழ்க்கைத் தோட்டத்தில்

ஒவ்வொரு பூக்களும்

யாரோ ஒருவருக்கு வரம்

யாரோ ஒருவருக்குச் சாபம் .. 

Wednesday, September 20, 2023

தேடல்


மின்சார வெளிச்சத்தில்
தொலைந்துபோன  நட்சத்திரங்களை 
இரவில் தேடுகிறது நிலா