கண்ணாடிச் சன்னல் வழியே
தேநீரோடு இருக்கும் மழையும்
சாலையோரக் குடிசையை
வியர்த்துக் கொண்டிருக்கும் மழையும்
ஒன்றல்ல வெவ்வேறு ...
கடற்கரையில் அரை நிர்வாணமாய்
சூரியகுளியல் தரும் ஞாயிறும்
குப்பை மேட்டில்
சிறுவனைச் சுட்டெரிக்கும் ஞாயிறும்
ஒன்றல்ல வெவ்வேறு ...
கூதிர் கால அதிகாலையில்
பஞ்சுமெத்தையில் நடுங்கவைக்கும் குளிரும்
பிளாட்பாரத்தில் கைலிக்குள்
நடுங்கவைக்கும் குளிரும்
ஒன்றல்ல வெவ்வேறு ...
வெள்ளைச் சோற்றை உண்ணமுடியாமல்
பங்களாவில் பத்தியம் இருக்கும் பசியும்
இருவேளை உணவில் ஒரு வேளையேனும்
சோற்றுக்கு மருகும் பசியும்
ஒன்றல்ல வெவ்வேறு ...
சென்னைக்கு மிக அருகில் எனக் கூறி
ஒரு குடும்பத்தின் கனவை
காசாக்கும் பொய்யும்
மருத்துவ மனைவாசலில்
கண்ணீர் மல்க ஒன்றும் ஆகாது என
ஆறுதல் சொல்லும் பொய்யும்
ஒன்றல்ல வெவ்வேறு ..
காதல் உச்சத்தில்
தனியாகச் சிரிக்க வைத்த நினைவும்
காலப் பிரிவில்
கண்கள் கலங்க வைக்கும் நினைவும்
ஒன்றல்ல வெவ்வேறு ..
வாழ்க்கைத் தோட்டத்தில்
ஒவ்வொரு பூக்களும்
யாரோ ஒருவருக்கு வரம்
யாரோ ஒருவருக்குச் சாபம் ..
No comments:
Post a Comment