Monday, June 24, 2013

மழை...!




மழையில் நனைந்தபடி
என் வீட்டு
ஜன்னல் கண்ணாடி வடிக்கிறது
ஆனந்தக் கண்ணீர் ..

Saturday, June 1, 2013

வீழாதே ..!







கண்ணீர் வற்றிப்போகும்
புன்னகை வற்றாது ..

துக்கம் கடந்து போகும்
வாழ்க்கை முடியாது ..

கண்ணீர் விழும்
கண்கள் விழாது ..

முயற்சியில் தோற்கலாம்
முயற்சி தோற்காது ...

அன்பு ஏமாற்றப்படலாம்
அன்பு ஏமாற்றாது ..

பகலும் முடியும்
இரவும் விடியும் ...

தோல்வியும் உரமாகும்
வெற்றியின் விதைக்கு ..

வெற்றியை வளர்க்க
தீ மூட்டு சோம்பலின் சிதைக்கு ..

வெளிச்சம் சுகம் காண
சிறிது இருளும் வேண்டும் ..

கனவின் முகம் காண
இரவும் வேண்டும் ..

இரவு விடியாமல்
முடியாது ..!



Friday, May 31, 2013

உணர்ச்சிக் கண்ணாடி







மௌனமாய்ப் பேசும் மொழி
அமைதியாய் இருக்கும் கோபம் 
கண்ணீராய் உருண்டோடும் மகிழ்ச்சி  
சிரிப்பாய்ச் சிதறும் சோகம்  
வெறுப்பாய் வெளிரும் அன்பு  
காதலாய் ஒளிரும்  நட்பு 
காமமாய் சிதறும் காதல் 

காட்சிகளை நேராகக் காட்டும்
தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட
கண்ணாடியாய், 
சில நேரங்களில் 
சில உணர்சிகள்...

Saturday, May 11, 2013

மணல் ...!





நிதிகள்
கற்களைச் சலவை செய்ததில்
அழுக்காய் வந்தன
மணல் ...!

Sunday, April 21, 2013

காகிதங்கள் கொண்ட கோபம் ..!








காகிதங்களும்
பேனாவும்
என் மீது கோபம் கொண்டன ..!


கவிதையை
வடம் பிடித்து வர ,
அவற்றை மறந்து
நான் கணினியில்
பயணம் செய்வதால் ..!


என் கணினி மீது அவை
பொறாமை கொள்கிறது ..
தாய் மருமகள் மீது
கொண்ட பொறாமை போல,
நேற்று வந்த நீ
என் இடத்தை நிரப்பி விட்டாயென ..
எல்லாக் கணவன்களைப் போல்
நானும் இந்தப் பொறாமையை இரசிக்கிறேன் ..!


Sunday, April 14, 2013

நிழல்கள்...!





மரங்கள் யாவும் 
நிலத்தின் மீது 
மயங்கி விழுந்தன- நிழலாக ,
வெயிலின் கொடுமை 
தாங்க முடியாமல் ...!

Thursday, April 11, 2013

குற்றஉணர்ச்சி ...!




யாருடைய கோபமென
தெரியவில்லை ..
என் கண்களை
கலங்க வைக்கிறது இந்தத் தூசி ...!