Saturday, December 10, 2011

கடவுளும் மனிதனும் ...!





கடவுள் மனிதனைப் படைத்தார் ,
மனிதனும் பல கடவுள்களைப் படைத்தான் ..

கடவுள் மனிதம் இல்லா மனங்களில் பேயைக்  கண்டார் ,
மனிதன் கடவுள் இல்லா இடங்களில் பேயைக்  கண்டான் ..  

கடவுள் மனிதன் மனதை கல்லாய்க் கண்டார் ,
மனிதன் கடவுளை கல்லில் கண்டான் ..

கடவுள் இதிகாசங்களில் மனிதன் ஆனார் ,
மனிதன் சில தருணங்களில் கடவுள் ஆனான் ..
 
கடவுளும் பூமியில் மனிதனை தேடுகிறார் ,
மனிதனும் கடவுளைத் தேடி அலைகிறான் ..

இறுதியில் ,
கடவுளும் பல நேரம் கடவுளாக இல்லை  
மனிதனும் பல நேரம் மனிதனாக இல்லை ..

Sunday, December 4, 2011

பட்டம்..!





சிறகின்றிப் பறக்கும்
உயிரின்றித் துடிக்கும்
காற்றைச் சுவாசிக்கும்
அதைச் சுவாசிக்கும் வரை
நிலைக்கும் ..

எப்போதும் உயர வேண்டும் என
நினைக்கும் ..

தன் நம்பிக்கை
நூல் கொண்டு
திசை நோக்கி
குறிக்கோளோடு
பறக்கும் ..

மது அருந்தாமலேயே 
தள்ளாடியபடியே
தனியே நிற்கும் ..


மனிதன் கையில்
இருப்பதால் என்னவோ
போட்டி வந்துவிட்டால்
அடுத்தவனை அறுக்கும் ..

பறவையும் போட்டி போடும் 
உன்னைப் பார்த்து ..

ஒற்றைக்காலில்
காற்றின் மெல்லிய
இசைக்கு நாட்டியமாடும்..

உண்மையில்
நான் படிக்காமல்
வாங்கிய பட்டம் நீ ..


Saturday, December 3, 2011

உறவுகள் ..!



காதுகளோடும்
வாயோடும்
உறவாடும்
கைபேசி ..

கண்களோடு
உறவாடும்
தொலைக்காட்சி ..

இப்படி மாறிப்போனதால்
மனதும் மறந்து போனது
மனிதரோடு உறவாட ...!

நான் யார் ?




என்னிடம்
எதுகையில்லை ,
மோனையில்லை,
சந்தமில்லை ,
மரபு இலக்கணப்படி
கவிதைக்கான எந்த
பந்தமும் இல்லை ..!
அப்படி என்றால்
நான் யார் ?

என்னிடம்
ஒரு கதைக்கான
தொடக்கமுமில்லை ,
அதை விளக்கும் சம்பவமுமில்லை ..
அதற்கான முடிவுமில்லை ,
இவை அனைத்தும் சொல்லும்
கருவுமில்லை ..
அப்படி என்றால்
நான் யார் ?

என்னில்
ஒரு கட்டுரைக்கான
ஆரம்பமும் இல்லை
முன்னம் வந்த வரிக்கும்
பின்னம் இருக்கும் வரிக்கும்
எந்த ஒரு தொடர்பும் இல்லை ..
இவை அனைத்தும் விளக்க
எந்த ஒரு கருத்துமில்லை ..
அப்படி என்றால்
நான் யார் ?

என்னைப் படித்தால்
புரியவில்லை
புரியாமலுமில்லை..
இவையாவும் படித்தால்
அர்த்தம் புரியாமலிருக்க
கிறுக்கலும் இல்லை ..
அப்படி என்றால்
நான் யார் ?