கடல் ,
நீர் கிடக்கும்
ஓர்
மாய உலகம் ..
கடல் ,
உலகில்
ஓர்
நீர் உலகம் ..
கடல் ,
அண்டத்தில்
மிதக்கும்
உலகில்
பதுங்கி இருக்கும்
பெரும் அண்டம் ..
கடல்
உப்பு கொண்டதால்
ரோசம் கொண்டு
அடிக்கடி பொங்கி விடுகிறது ..
கடல் ,
கடவுள்
உலகைப் படைக்க
உழைத்த உழைப்பில்
விளைந்த வியர்வை ..
கடல் ,
நிலவு
மேகம்
வானம்
முகம் பார்க்கும்
பெரும் கண்ணாடி ...
கடல்
மீன்கள் விளைந்து
கொழிக்கும்
நீர் விளை நிலம் ..
கடல் ,
சூரியன்
துயில் கொண்டு
துயில் எழும்
பள்ளியறை ..
கடல் ,
மழையின்
புயலின்
பல்லாயிரம் உயிரின்
கருவறை ..
கடல்
தன் கரைதாண்டி
சீற்றம் கொண்டால்
நம் கல்லறை ..
கடல் ,
பூமித்தட்டின்
தாளத்திற்கும் ஏற்ப
நடனமிடுகிறது
ஆழிப்பேரலையாய் ..
கடல்,
பூமியில்
இருக்கும்
ஆதிக்கச் சாதி ..
கடல்,
தன் நீரை
நிலத்தினுள்
பிரசவிக்க முயல்கிறது
அலைகளாய் ..
கடல் ,
ஒளிகூட
வெகுதூரம் உட்புக அஞ்சி
பின்வாங்கும்
மர்ம உலகம் ..
கடல்
உலகின் மொத்த
அசுத்தங்களை
சுமந்து இருக்கும்
புண்ணிய நதி ...
கடல் ,
உயிரின் ஆதாரம்
நீர் என்றால் ,
அந்த நீரின்
ஆதாரம் கடல் ..
கடல் ,
வானின்
நிறம் தொட்டு
தனக்கு அரிதாரம்
பூசிக்கொள்கிறது ..
கடல்
உலகின் அதிசயங்கள்
பல புதைந்திருக்கும்
பெரும் அதிசயம் ..!