Friday, July 11, 2025

மகனதிகாரம்



மகனே நீ பிறக்கையில் 

உன் அழுகை‌‌க்குப் பிறந்தது என் சிரிப்பு ...


உன்னைக் கைகளில் ஏந்திய முதல் தருணம்

என் உலகமே எந்தன் கைகளுக்குள் அடங்கியது ...


நீ என் விரல் பற்றிக் கொண்டு உறங்கினாய்

நம்பிக்கை என்னுள் விழித்துக் கொண்டது ...


உன் பிஞ்சுப் பாதங்கள் என் முகத்தை உதைக்கையில்

கடவுள் என்னை ஆசீர்வதிக்கத் தொடங்கினார் ...


உன் கோபங்கள் முன் மண்டியிட வைத்து விடுகிறாய்

நான் என்னும் அகங்காரத்தையும்


உன்னோடு கண்ணாமூச்சி விளையாடுகையில்

என் கவலைகளும் மறைந்து ஒளிந்து கொள்கிறது


உன்னோடு பருப்பு கடைந்து விளையாடுகையில்

உண்ணாமல் வயிறு நிரம்புகிறது 


உறக்கம் கலையாமல் உன்னை முத்தமிட முயன்று

ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறேன்

சில வரிகளில் உன்னை எழுத முயலும் இந்தக் கவிதைப் போல் ...


Friday, July 4, 2025

பெண்மையும் கவிதையும்

                         


அகமும் பேசும்

புறமும் பேசும் 

அழகாய் பொய் பேசும்

கேட்க கேட்க மயக்கும்

கேட்பவரே ரசிக்கும்படி குத்திக் காட்டும்

அடி அடியாய் எடுத்து வைத்து சீராய் அசையும்


கருவாவது ஓர் இடத்தில்

வாழ்வாங்கு வாழ்வது வேறு இடத்தில்

குழந்தையாக ஹைக்கூ

குமரியாகக் காதல் கவிதை

தோழியாகப் புதுக்கவிதை

மனைவியாக எதிர் கவிதை

தாயாக மரபுக்கவிதை 


சில நேரம்

எத்தனை முறை படித்தாலும் புரிவதில்லை..

அப்பா


உலகில் அதிகம் எழுதப்படாத கவிதை

சரியாகப் புரிந்து கொள்ளப்படாத கவிதையும் கூட


பிள்ளையின் முதல் அழுகைக்கு

பிறக்கிறார் அப்பா


அப்பாவின் கைகள் பற்றிக் கொள்ளும் தருணம்

நம்பிக்கையும் பற்றிக்கொள்ளும்


அம்மாவின் நிழலில் நம்மை இளைப்பாற விட்டு

சூரியனை அணைத்துக் கொள்ளும் பெரு வெளிச்சம்


கத்தரித்துக்கொள்ள இயலாத பேரன்பின் தொப்புள் கொடியை

யாருக்கும் தெரிய வண்ணம் உள்ளுக்குள்ளே வைத்திருப்பார்


நம் கண்ணீர்த் துளிகள் துடைத்தெறியும் விருப்பமான கைக்குட்டை

கனவிலும் வந்து விருப்ப உணவு ஊட்டி விட்ட மாய வித்தைக்காரர்


என்னில் இருக்கும் அத்தனையும் உன்னிலிருந்து வந்தது

இடியுடன் கூடிய மழையாய் கண்டிப்புடன் அன்பு நீ தந்தது


அப்பாவின் செருப்பு நாம் அணியும் வரை

அந்தக் கால்களின் வலி புரிவதில்லை