உலகில் அதிகம் எழுதப்படாத கவிதை
சரியாகப் புரிந்து கொள்ளப்படாத கவிதையும் கூட
பிள்ளையின் முதல் அழுகைக்கு
பிறக்கிறார் அப்பா
அப்பாவின் கைகள் பற்றிக் கொள்ளும் தருணம்
நம்பிக்கையும் பற்றிக்கொள்ளும்
அம்மாவின் நிழலில் நம்மை இளைப்பாற விட்டு
சூரியனை அணைத்துக் கொள்ளும் பெரு வெளிச்சம்
கத்தரித்துக்கொள்ள இயலாத பேரன்பின் தொப்புள் கொடியை
யாருக்கும் தெரிய வண்ணம் உள்ளுக்குள்ளே வைத்திருப்பார்
நம் கண்ணீர்த் துளிகள் துடைத்தெறியும் விருப்பமான கைக்குட்டை
கனவிலும் வந்து விருப்ப உணவு ஊட்டி விட்ட மாய வித்தைக்காரர்
என்னில் இருக்கும் அத்தனையும் உன்னிலிருந்து வந்தது
இடியுடன் கூடிய மழையாய் கண்டிப்புடன் அன்பு நீ தந்தது
அப்பாவின் செருப்பு நாம் அணியும் வரை
அந்தக் கால்களின் வலி புரிவதில்லை
No comments:
Post a Comment