Friday, July 11, 2025

மகனதிகாரம்



மகனே நீ பிறக்கையில் 

உன் அழுகை‌‌க்குப் பிறந்தது என் சிரிப்பு ...


உன்னைக் கைகளில் ஏந்திய முதல் தருணம்

என் உலகமே எந்தன் கைகளுக்குள் அடங்கியது ...


நீ என் விரல் பற்றிக் கொண்டு உறங்கினாய்

நம்பிக்கை என்னுள் விழித்துக் கொண்டது ...


உன் பிஞ்சுப் பாதங்கள் என் முகத்தை உதைக்கையில்

கடவுள் என்னை ஆசீர்வதிக்கத் தொடங்கினார் ...


உன் கோபங்கள் முன் மண்டியிட வைத்து விடுகிறாய்

நான் என்னும் அகங்காரத்தையும்


உன்னோடு கண்ணாமூச்சி விளையாடுகையில்

என் கவலைகளும் மறைந்து ஒளிந்து கொள்கிறது


உன்னோடு பருப்பு கடைந்து விளையாடுகையில்

உண்ணாமல் வயிறு நிரம்புகிறது 


உறக்கம் கலையாமல் உன்னை முத்தமிட முயன்று

ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறேன்

சில வரிகளில் உன்னை எழுத முயலும் இந்தக் கவிதைப் போல் ...


No comments: