கூதிர் காலக் காலையில் மலர்ந்து
கடவுள் சேரும்
கருவறைப் பூ ஒன்று
மலத்தை உரமாய்ச் செரித்துப்
புதராய் மலரும்
கல்லறைப் பூ ஒன்று
அங்கு வந்த ஒரு
வண்டால் நிகழ்ந்தது
அயல் மகரந்தச் சேர்க்கை
அன்பால் விளைந்து
சாதியற்று புதியதோர் வகையாய்
புதிதாய்ப் பூக்கத்தொடங்கியது
ஒரு மொட்டு
புதியதோர் மொட்டு
மலரக் கண்டு சினம் கொண்ட
காவல் கூட்டம்
கல்லறைக் காட்டைக் கொளுத்தியது
தீட்டெனச் சொல்லப்பட்ட
புதியதோர்
மொட்டை கருவறுத்து
பூவைத் தீயில் பொசுக்கியது
தீயில் கருகியப்
பூக்களின் சாம்பல்
காற்றில் பறந்தபடி
தனது காதலைத் தேடத் தொடங்கியது
மீண்டும் ஒரு வண்டு
பூக்களைத் தேடிப் பறந்தபடி
புதியதோர் அயல் மகரந்தச்
சேர்க்கைக்குத் தயாரானது
No comments:
Post a Comment