குழந்தைகள் கைபிடித்த வாஞ்சையில்
மயங்கி வானில் பறந்துபோன பலூன்
நிச்சயம் சொர்க்கம் சேர்ந்திருக்கும்
குழந்தைகளுடன் கண்ணாமூச்சி
விளையாடும் பொழுது
முதலில் மறைவது நம் கவலை
சாலையோர அனாதை பொம்மைகளை
வீட்டிற்கு அழைத்து வந்து பெயர் சூட்டி
ஆதரவு அளிக்கிறார்கள் குழந்தைகள்
குழந்தைகளின்
கிறுக்கல்களும் மழலைச் சொற்களும்
கடவுளின் கையெழுத்தும் மொழியும்
குழந்தைகளின் பக்தி
மெழுகுவர்த்திக்கும்
குத்து விளக்குக்கும்
வேறுபாடு அறியாது
குழந்தைகளின் ஜன்னல்கள்
கதவுகளும் தடுப்புகளும் அற்றவை
அங்கே காற்றுக்கு எந்தத் தடையும் இல்லை

No comments:
Post a Comment