Sunday, December 28, 2025

மார்கழி பூ





ஒரே வானதின் கீழ் நாம்
வாழ்கிறோம் என்ற நம்பிக்கையில்
கடந்து செல்லும் மேகங்களில்
சொற்களை அனுப்புகிறேன்
அவற்றில் சில மழையாய்
உன்னைச் நிச்சயம் சேர்ந்திருக்கும்

நீரை கை இடுக்கில்
இறுக்கிப் பிடிக்க முயற்சிக்கும்
ஒரு சிறுவனின் லாவகம்
நீ எப்போதும் மழையைக் 
கையில் ஏந்தும் தருணம்

ஆத்திகன் முன் கடவுள் தோன்றினால்
முதலில் மனதில் தோன்றும்
சந்தேகம் போல இருந்தது
திடீரென ஒரு புயல் மழை
ஓய்ந்த மாலையில்
எப்போதும் சந்திக்கும் பூங்காவிற்கு
என்னை நீ வரச் சொன்ன தருணம்

அங்கு நாம் சந்தித்த பொழுது
நாம் அமர இருந்த நாற்காலியில்
ஒரு மார்கழி பூ அமர்ந்திருந்தது
ஏனோ அதை நாம் பார்த்த பின்பு
பேசாமலே பிரிந்து சென்றோம்
மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது

No comments: