Sunday, March 27, 2011

நம்பிக்கை ..!




இலைகள் யாவும்
காம்பின்
நுனியில் ,
காற்றின் தாலாட்டில்
ஊஞ்சல்
ஆடுகிறது ..!

மறுபக்கம் ..!





இருள்
கண்ட காட்சி மட்டும்
யாரும்
காண முடிவதில்லை,
இருளைத்  தவிர ..!

வலித்துகள்கள் ...!




ஒவ்வொரு
கண்ணீர் துளிகளும் ,
மனதில் உடைந்து
வெளியே சிதறும்
வலிகள் ...!

Saturday, March 19, 2011

ஒரு தலைக்காதல் ..!




பிடித்த இடத்திலிருந்து
பின் தொடர்ந்து செல்கிறது
தன் பயணத்தை நீட்டிக்  கொண்டு தீப்பொறி
சிதறிய எரிபொருளுக்காக 

போகும் பாதையில்
கோபமாய்
வழிபடும் இடர்களை எரித்து
மிச்சத்தை எச்சமாய்
வழித்தடமாக்கி விடுகிறது
மறந்துபோய் 

இதுவரை
யாருக்கும் தெரியாமல் இருக்க
இப்போது காட்டிவிட்டது
பாதையை 

தெரிந்துவிட்டது
குறிக்கோள் ,
இருப்பினும்
பின் தொடர்கிறது
அதன் நீளம் முழுக்க 

அடைவதையே
எண்ணிக்கொண்டு
தூரம்
காலம்
ஆபத்து
ஏதும் எண்ணவில்லை 

இறுதியாக
வந்தது பயணத்தின் 
முற்றுப்புள்ளியாய்
சிதறிய எரிபொருள் 
இடைவெளியில் 

தொடர்ந்தது
இந்த முற்றில் 
முடிந்தது

இறுதியாய்
அடைந்த இடத்தில், 
ஏக்கத்தோடு எரிந்து முடிந்தது
தீப்பொறியின் பயணம் 

இடைவெளியின்
முடிவில்
தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது
அந்த எரிபொருளின் சிதறல் ..!


Saturday, March 12, 2011

என் விசையிழந்த திசைகள் ..!





என் விசையிழந்த
திசை நோக்கி
பயணம் செய்தேன் ஒரு நாள் ..

அங்கு நான்,
தோல்விகளை
வென்றேன் ..
வெற்றிகளை
தோற்றேன் ..

எதைக் கொண்டாட,
எதை வருத்தப்பட,
என எண்ணி
வருத்தப்பட்டுக் கொண்டாடினேன் ..

அங்கு முயற்சிக்கு
என்றுமே பலனில்லை,
தோல்வியே ஜெயம்
முயற்சி தீவினையாக்கும் ..

என் எதிரிகளின்
கனவுப் பிரதேசம் அது..

என் தசைகளை ருசிக்காமல்
தோல்வியை ருசிக்கும்
பருந்துகளின் சொர்க்க பூமி ..

என் வலிகளையும்
அலறலையும்
இரத்தத்தையும்
உறியும்
காட்டேரிகளின்
உலகம் அது ..

யார் செய்த சூன்யமோ தெரியவில்லை
ஒன்றுமே விளங்குவதில்லை
இந்தத் திசையில் ..!

Monday, March 7, 2011

பயம்…!



இருள் கண்டு
பயந்தவர்கள் கூட
கண் விழித்து
உறங்குவதில்லை…!

Sunday, March 6, 2011

யார் குற்றம்...!





கொலை
செய்துவிட்டேன்,
குற்றம் யாருடையது
கத்தியுடையதா?
என்னுடையதா?

மாயை ..!





விழித்திருந்தேன்,

உறங்கிவிட்டேன்,
எழுந்து பார்த்தால்
கனவு ..!

வேள்வி.... !



மரம்
வெட்டி நடக்கிறது,
மழை
வர வேண்டி
வேள்வி ..!

Saturday, March 5, 2011

வறுமையின் நிறம் கருப்பு




வறுமையின் நிறம் சிகப்பாம் ,
எனக்கோ வறுமையின் நிறம் கருப்பு ..

தொப்புள் கொடி அறுத்த முதல் நாளே ,
ஏனோ என உறவை தாயும் அறுத்து விட்டாள் ..

பால் கேட்டு அழுதிடும் எனக்கு
ஒரு வேலை பால் கூடத் தர தெம்பில்லை அவளுக்கு ..
அவள் செய்தது பாவம் தான்
ஆனாலும் அவள் பாவம் ..

கருவறைக்குள்ளே இருட்டிலிருந்தும்
வாழ்க்கை வெளிச்சமாயிருந்தது,
இங்கே வெளிச்சம்
வாழ்க்கையை இருட்டடித்தது ..

தவழும் வயதில் உண்டக் களிமண் ருசித்ததால் ,
இன்னும் அதையே உண்கிறேன் ..
களிமண் வைத்துப் பொம்மை செய்வார்கள்
நான் என் உடலைச் செய்தேன் ..

கொடுக்கும் தெய்வம் கூரையை
பிய்த்துக் கொடுக்குமாம்
என் தெய்வம் வானம் பிய்த்துக் கொடுக்கும்
வான் ஊர்தியில் உணவும் மருந்தும் 
அன்று தான் எனக்கு விருந்தும் ..

குப்பைத் தொட்டியில் தினமும் எனக்கு
மல்யுத்த போட்டி தான் தெரு நாய்களுடன்
மிச்ச மீதிக்காக ...!

நான் அனாதை இல்லை
ஆதாம் ஏவாளின் உண்மை வாரிசு நான்
ஏனெனில் நான் ஆடையே அணிவதில்லை ...!

தினமும் சூரியக் குளியல் தான்
உச்சிவெயிலில் ..!

பிறந்தது முதல்
என் தினசரி வேலை
உயிரோடிருப்பது ...!

இப்படித்தான் வாழ்க்கை,
இப்போது சொல்லுங்கள்
வறுமையின் நிறம் கருப்பு தானே ..

Wednesday, March 2, 2011

ஹைக்கூ -3..!



மெழுகுவத்தி..!

இருட்டில் உன் பயணம் ஒளிப் பெற
நான் உன் வழியில்
தனியாக அழுகிறேன்
- மெழுகுவத்தி ..!

உறவுகள்…!

காதுகளொடும்
வாயோடும்
உறவாடும் –கைபேசி
கண்களோடு உறவாடும் - தொலைக்காட்சி
இதனால் மனிதன் மறந்து போனான்
மனிதனோடு உறவாட ..!

இனிப்பு ..!

இனிப்பை விரும்பும் யாரும்
இனிப்பை விரும்பும் எறும்பிடம்
இனிப்பைப்  போல்
இனிமையாய்
இருப்பதில்லை ..!

இறுதிமுடிவு…!

அந்த நெடுந்தொடரின் இறுதிமுடிவை
எப்படியும் பார்க்க வேண்டும் என்று
உறுதியாய் இருந்த
அந்தக் கிழவியின் இறுதி ஆசையை
இறுதிவரை நிரைவேற்ற முடியவில்லை..!

வாழ்க்கை ரேகை ..!

முதுமை
முகத்தின்
ஒவ்வொரு
சுருக்கங்களிலும் ,
கடந்து வந்த வாழ்க்கை
பாதையின்
சுவடுகள்....!

இரத்தகடிதங்கள்...!

மரத்தின்
இரத்தத்தால்
செய்த
காகிகத்தால்
சில காதல்
கடிதங்கள் ...!

வறுமையின் வாசம் ...!

கோவில் தெருவில்
பூ விற்கும்
சிறுமியின்
வாழ்க்கை மட்டும்
மணப்பதேயில்லை ..!