வறுமையின் நிறம் சிகப்பாம் ,
எனக்கோ வறுமையின் நிறம் கருப்பு ..
தொப்புள் கொடி அறுத்த முதல் நாளே ,
ஏனோ என உறவை தாயும் அறுத்து விட்டாள் ..
பால் கேட்டு அழுதிடும் எனக்கு
ஒரு வேலை பால் கூடத் தர தெம்பில்லை அவளுக்கு ..
அவள் செய்தது பாவம் தான்
ஆனாலும் அவள் பாவம் ..
கருவறைக்குள்ளே இருட்டிலிருந்தும்
வாழ்க்கை வெளிச்சமாயிருந்தது,
இங்கே வெளிச்சம்
வாழ்க்கையை இருட்டடித்தது ..
தவழும் வயதில் உண்டக் களிமண் ருசித்ததால் ,
இன்னும் அதையே உண்கிறேன் ..
களிமண் வைத்துப் பொம்மை செய்வார்கள்
நான் என் உடலைச் செய்தேன் ..
கொடுக்கும் தெய்வம் கூரையை
பிய்த்துக் கொடுக்குமாம்
என் தெய்வம் வானம் பிய்த்துக் கொடுக்கும்
வான் ஊர்தியில் உணவும் மருந்தும்
அன்று தான் எனக்கு விருந்தும் ..
குப்பைத் தொட்டியில் தினமும் எனக்கு
மல்யுத்த போட்டி தான் தெரு நாய்களுடன்
மிச்ச மீதிக்காக ...!
நான் அனாதை இல்லை
ஆதாம் ஏவாளின் உண்மை வாரிசு நான்
ஏனெனில் நான் ஆடையே அணிவதில்லை ...!
தினமும் சூரியக் குளியல் தான்
உச்சிவெயிலில் ..!
பிறந்தது முதல்
என் தினசரி வேலை
உயிரோடிருப்பது ...!
இப்படித்தான் வாழ்க்கை,
இப்போது சொல்லுங்கள்
வறுமையின் நிறம் கருப்பு தானே ..
No comments:
Post a Comment