Sunday, September 29, 2024

நினைவின் நீட்சி



மாலை நேரம் ஜன்னல் வழி
என் கையோடிருக்கும் தேநீர் கோப்பையில்
நிரம்பி வழிகிற உன் நினைவை
எதைக் கொண்டு பிடிப்பேன்

நாம் ரசித்த பாடல் ஒன்று
இன்று தனியே நான் கேட்கும் போது
செவியில் பாடும் உன்  குரலை 
எதைக் கொண்டு தடுப்பேன் 

தாய் தேடி ஓடும் சேய் போல
நித்தமும் உனைத்  தேடி ஓடும் 

என் கண்ணீரை
எதைக் கொண்டு நிறுத்துவேன்


பெரு மழையில் நனைகையில்
நெஞ்சில் பிசுபிசுக்கும்

உன் முகத்தை 
எதைக் கொண்டு உலர்த்துவேன் 


தனிமையின் சுவற்றில்

பல வண்ண ஓவியங்கள் வரையும்

நீ சொன்ன கனவுகளை 

எதைக் கொண்டு கலைப்பேன் 

உனைப்  பற்றி எழுத மறுக்கும்

மனதை மீறி வந்து விழும்

இந்த கவிதைகளை
எதைக் கொண்டு அழிப்பேன்

Saturday, September 28, 2024

காதல்


ஓர் நீர்க்குமிழிக்குள்  சிறைப்பட்டு

காலமும் தவம் கிடப்பது


இதழ் விரியா மலருக்குள் சிக்கிக் கொண்டு

உள்ளூற மணப்பது 


சேவலின் தொண்டைக் குழியில் சூல் கொண்டு

அதிகாலை வெளிவர மறுப்பது


நீருக்கு வெளியே குதித்த மீன் மீண்டும் நீர்ப் புக மறுத்து

காற்றோடு பறந்து வாழ எத்தனிப்பது


பலூனில் மாட்டிக் கொண்ட காற்றாய்

சீமைக் கருவேலமரக் காட்டில் பறப்பது


பிறந்த சிசுவின் கைகளில் மாட்டிக் கொண்ட விரலாய்

எடுக்க முடியாமல் மயங்கி இருப்பது 


உதை வாங்கி‌ விரட்டப்பட்ட நாயாய்

மீண்டும் எஜமான் வீட்டு வாசலிலேயே தவம் கிடப்பது


இப்படி எளிதாக 

விட்டு விடுதலையாக வாய்ப்பிருந்தும்

தானாய் முன்வந்து அழகாய் 

சிலுவையில் சிறைப்பட்டுக் கிடப்பது காதல்

Saturday, September 14, 2024

குளம்









Swathi Mutthina Male Haniye (2023 kannada-என்ற கன்னட படத்தில் வரும் ஒரு கன்னட கவிதையின் தமிழாக்க முயற்சி இது . இணையவழி இந்த திரைப்படம் பார்த்ததால் ஆங்கில வசன வரிகள் (subtitle ) இந்த கன்னட கவிதையை புரிந்து கொள்ள உதவியாக இருந்தது 


அன்று போல் இல்லை 
இன்று இந்த குளம் 

அப்போதெல்லாம்
இந்த சகதி பாசிகள் இல்லை  
அதிகாலை நடை பயில வரும் பனியுடன் 
மெலிதாய் சலசலத்து பேசிக்கொண்டு இருந்தது

நண்பகல் சூரியனின் பிம்பத்தைக்  கண்டு 
கண்கூசியபடி ரசித்துக்கொண்டிருந்தது

இரவில் வரும் 
நிலவையும் நட்சத்திரங்களையும் 
தன்னில் தாலாட்டிக் கொண்டிருந்தது 

ஆம் 
இந்த குளம் உயிர்ப்புடன் இருந்தது  

அன்று போல்  இல்லை
இன்று  இந்த குளம் 

வெகுகாலமாக மேய்ச்சல் நிலத்தில் தவழ்ந்து கொண்டிருந்த
குளிர் காற்றை ஆரத் தழுவிக் கொண்டிருந்தது 

பின் ஒரு கடுங்கோடையின் வெயிலில் ஆவியாகி 
தன்னை நிர்வாணமாக்கத் தொடங்கியது  

இறுதியில் சுட்டெரிக்கும் வெப்பத்தையும் அது தந்த காயங்களையும் 
ஏற்றுக்கொண்டு அமைதியாகத் தொடங்கியது  

இன்று குளத்தில் நடந்து சென்றால் 
இருப்பதெல்லாம் சேரும் சகதியும் 

ஆனால் அன்று குளம் 
இது போல் இல்லை 
அது  உயிர்ப்புடன் இருந்தது 

அன்று பார்த்தது போல் இல்லை
இன்று இந்த குளம் 

ஆனால் ஏனோ சில காலமாக
இப்போது போலவே 
எப்போதும் இருக்கக் குளம் எண்ணியது 

வெயிலுக்கும் மழைக்கும் மாறி மாறி 
மாறுவேடம் போட அதற்கு விருப்பமில்லை 
 
எப்போது மாறாமல் 
மூடுபனியுடன் கிசுகிசுக்காமல் 
சூரியனுடன் காதல் உறவாடாமல் 
நிலவையும் நட்சத்திரங்களையும் 
நினைவிலும் தேடாமல் 
இருக்கவே குளம் விரும்பியது 

ஒருவேளை 
மூடுபனியிடமும் 
சூரியனிடமும் 
பேசும்போது 
தன்னை தொலைத்து விட்டால் ?

இல்லை , குளம் தன்னை இழக்கக்கூடாது 
இப்போது போலவே எப்போதும் இருக்கவேண்டும் 

பழைய நினைவுகளின் சவப்பெட்டி மேல் 
பூக்கள் துளிர்விடுவதால் 
அது உயிர்ப்புடன் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறது 

ஆனால் 
இந்த சேறு சகதி 
மக்கிக்கொண்டிருக்கும் இலைகள் 
தூக்கிப் போடப்பட்ட ஷாம்பூ பாக்கெட் 
எதுவும் உயிருடன் இல்லை 
ஜீவன் இருப்பதற்கான ஒரு அறிகுறியுமில்லை 
மன்னித்து விடுங்கள்  

அன்று போல் இல்லை 
இன்று இந்த குளம் 

Friday, September 13, 2024

அழகிய நாட்கள்



தாயின் அரவணைப்பில்
தூங்கிய குழந்தை
தாய் விலகிய பின்னர்
நீண்ட நேரம் கழித்துத்
திடுக்கிட்டு விழிப்பது போல
வாழ்வின் அத்தனை அழகிய நாட்களும் 
நம்மை விட்டு விலகிய பின்னர்
நினைவுகளில் விழித்துக் கொள்கிறது ...

தொலைதூர விண்மீன்களாய்
 கால வெளியின் அண்டத்தில்
ஆங்காங்கே சிறு புள்ளியாய்
புன்னகைக்கிறது நம்மைப் பார்த்து
அழகிய நாட்கள் ..