ஓர் நீர்க்குமிழிக்குள் சிறைப்பட்டு
காலமும் தவம் கிடப்பது
இதழ் விரியா மலருக்குள் சிக்கிக் கொண்டு
உள்ளூற மணப்பது
சேவலின் தொண்டைக் குழியில் சூல் கொண்டு
அதிகாலை வெளிவர மறுப்பது
நீருக்கு வெளியே குதித்த மீன் மீண்டும் நீர்ப் புக மறுத்து
காற்றோடு பறந்து வாழ எத்தனிப்பது
பலூனில் மாட்டிக் கொண்ட காற்றாய்
சீமைக் கருவேலமரக் காட்டில் பறப்பது
பிறந்த சிசுவின் கைகளில் மாட்டிக் கொண்ட விரலாய்
எடுக்க முடியாமல் மயங்கி இருப்பது
உதை வாங்கி விரட்டப்பட்ட நாயாய்
மீண்டும் எஜமான் வீட்டு வாசலிலேயே தவம் கிடப்பது
இப்படி எளிதாக
விட்டு விடுதலையாக வாய்ப்பிருந்தும்
தானாய் முன்வந்து அழகாய்
சிலுவையில் சிறைப்பட்டுக் கிடப்பது காதல்
No comments:
Post a Comment