மாலை நேரம் ஜன்னல் வழி
என் கையோடிருக்கும் தேநீர் கோப்பையில்
நிரம்பி வழிகிற உன் நினைவை
எதைக் கொண்டு பிடிப்பேன்
நாம் ரசித்த பாடல் ஒன்று
இன்று தனியே நான் கேட்கும் போது
செவியில் பாடும் உன் குரலை
எதைக் கொண்டு தடுப்பேன்
தாய் தேடி ஓடும் சேய் போல
நித்தமும் உனைத் தேடி ஓடும்
என் கண்ணீரை
எதைக் கொண்டு நிறுத்துவேன்
பெரு மழையில் நனைகையில்
நெஞ்சில் பிசுபிசுக்கும்
உன் முகத்தை
எதைக் கொண்டு உலர்த்துவேன்
தனிமையின் சுவற்றில்
பல வண்ண ஓவியங்கள் வரையும்
நீ சொன்ன கனவுகளை
எதைக் கொண்டு கலைப்பேன்
உனைப் பற்றி எழுத மறுக்கும்
மனதை மீறி வந்து விழும்
இந்த கவிதைகளை
எதைக் கொண்டு அழிப்பேன்
No comments:
Post a Comment