Saturday, November 1, 2025

நதியில் விளையாடி ...!

 



நதியில் விளையாடிய காட்சி,


ஒரு கருவாட்டின் கண்ணில்

கடைசி நினைவாகப்

பொதிந்திருக்கலாம்


மேகத்திலிருந்து நதியின்

காய்ந்த மடியில் விழுந்து

மணலில் புதைந்து மடிந்த

மழைத்துளி 

இறுதியாகத் தேடியிருக்கலாம்


பால் சுரக்காத மார்பைப் போல

நீரில்லா நதியை விடாமல் அறுக்கும்

மணல் லாரி

தன் கிளீனர் இங்கே

என்றோ குளிப்பாட்டிய நினைவில்

ஒரு நொடி வந்திருக்கலாம்


ஏரிக்கரையோர அடுக்குமாடிக்குடியிருப்புச் 

சுவரில் உறங்கிக் கொண்டிருக்கும் மணல்

ஏரிக்கரை நீர்ச் சலசலக்கும்

சத்தம் கேட்டு ஏங்கியிருக்கலாம்


இரவில் தன் முகம் பார்க்கும்

நீண்டக் கண்ணாடியைத் 

தேடுகையில் நினைத்திருக்கலாம்


சேய்க் காணாத தாய் போல

முகத்துவாரத்தில் அலையும்

கடலின் தேடலிலிருக்கலாம்


நாகரீகத் தொட்டில் தந்து வளர்த்தத் தாயை

வளர்ச்சியெனக் காரணம் தந்து

மனிதன் இன்று மறந்தது ஏனோ

Sunday, October 26, 2025

தீபங்கள் பேசும்

 




மேய்ப்பரைத் தேடிக் கொண்டு அலைவது
ஆட்டு மந்தைகளின்
ஆதி காலத்துக் குணம்

புது மேய்ப்பன் கையில்
கவர்ச்சிப் புற்கள் கண்டால்
மந்தைகள்
புது மேய்ப்பன் தேடி ஓடும் 

குடிமை உணர்வற்ற
சுயநலமிக்க
மந்தைகளுக்கு
எந்த மேய்ப்பனும்
ஆடுகள் வளர்ப்பது
கசாப்புக்கு 
என்ற உண்மை புரிவதில்லை

பால் குடிக்கும் குட்டிகளுக்கு
கவர்ச்சிப் புற்கள் 
எதற்கு என யோசிப்பதுமில்லை

உயிர்களின் மதிப்பையே
உணராத தேசத்தில்
ஓட்டுக்களின்
மதிப்பும் உணரப்போவதில்லை

குழந்தைகளின் படங்கள்
முன் ஏற்றப்படும் தீபங்கள் போல 
எதுவும் ஒரு குடும்பத்தை
இருட்டடிப்புச் செய்வதில்லை

பிணம் கண்டு உயிர்த்தெழுந்த
அரசியல் திண்ணிகள் கண்டு
அஞ்சிய அந்தத் தீபங்கள் 
நடுங்கிய படி
காற்றில் மூச்சுத் தினறி
ஏதோ பேசுகிறது

Tuesday, October 14, 2025

அன்பின் அருவம்

 


கருவில் இருக்கும் சிசு

கானும் கனவு போலச் சில அன்பு

யாருக்கும் நினைவில் இருக்காது

அந்தச் சிசு உட்பட

Monday, October 13, 2025

தலைப் பிரசவம்





முதல் முறையாக 

மரத்தில் 

கட்டப் படும் கூடு

மரத்தின் 

தலைப் பிரசவம் 

Saturday, October 11, 2025

எரியும் இரவுகள்


சாவற்ற சாபம் பெற்ற நினைவுகள்

கருவுற்றுப் பிரசவிக்கும் போதெல்லாம்

கனவில் வரும்  ஒரு பட்டாம்பூச்சி

பறக்க முடியாமல்

நடந்து போகிறது 


விருப்பமான நிறைவேறாத ஆசைகள்

பாலைவனப் புயலில்

புழுதி படிந்தபடி நடக்கையில்

அங்குத் தெரிந்த கானல் நீரை

தன் தாகம் தீர்க்கும்

என்ற நம்பிக்கையில் குடிக்கிறது 


சவப்பெட்டியில் அடக்கமான உணர்வுகள்

முகப்புத்தகத்தில் இறந்து போனவரின்

நேர்க்கோட்டில் எழுதப்பட்ட

பிறந்தநாள் வாழ்த்தின்

அர்த்தம் புரிய முயற்சிக்கிறது


அழகிய பிரமையில் மயங்கியிருக்கும்

குழந்தையின் ஆடல் போலக்

காற்றில் பறந்தபடி ஆடுகிறது

உன் பெயர் எழுதப்பட்ட காகிதம்

எரியும் இரவுகளின் வெளிச்சத்தில்

மீண்டும் ஒரு முறை

பின் தொடர்ந்து

படிக்க முயற்சிக்கிறேன் 

Sunday, September 14, 2025

தேடல்

 




தன் ஆயுள் முழுக்க

வானத்தை அளக்க எண்ணி

தோற்றுப் போகிறது

பறவை 

Saturday, August 23, 2025

அன்பை விளக்கும் சொல்



அன்பின் பிரசவம்
எப்பொழுதும் நிகழும் 
 
கருவில் இருக்கும் சிசு
காணும் கனவில்

பிறந்த குழந்தைக்கு
பசி அமர்த்தும் முலையில்

கண்ணீர்த் துளிர்க்கும் முகம் கண்டு
கட்டி அணைத்து குழந்தை தரும் முத்தத்தில்

ஊடலை உடைத்தெறிய பேசாமல் மேசைமேல்
வைக்கப்பட்ட ஒரு தேநீர்க் கோப்பையில்  

இறுதிச் சந்திப்பின் கடைசி முத்தத்தில்
பிரிவின் சுவைக்  கூட்டிய கண்ணீரில்  

இறந்தவரின் கைபேசி எண்ணை
அழிக்கும் போது கைகளின் நடுக்கத்தில்  

தன் எஜமானுக்காக இரயில் நிலையத்தில்
ஆயுள் முழுதும் காத்திருந்த நாயின் கண்களில்

இப்படியாக 
அன்பை விளக்கச் சொற்கள் தேவை இல்லை
சொல்லித்தான் புரியுமெனில் அங்கு அன்பு இல்லை  ..