மீன்களின் சிரிப்பு ...!
தொலைக்காட்சியில்
வருகிறோம் என
எண்ணி சிரிக்கிறது,
அந்த மீனவப்பிள்ளை,
தன் தந்தை நடுக்கடலில்
கொல்லப்பட்டதன்
விளைவுகள் புரியாமல் ...!
வறுமையின் சத்தம்...!
வறுமையின் சத்தம்
மின்சார இரயிலில் கேட்கிறது ,
குருட்டுப் பிச்சைக்காரனிடமிருந்து,
இரயில் சத்தத்தையும் தாண்டி...!
துப்பாக்கியின் சத்தம்....!
துப்பாக்கியின் உண்மையான சத்தம் கேட்கிறது
துப்பாக்கிச் சூட்டில் அடிப்பட்ட ,
குழந்தையின் - அழுகுரலில்...!
யுத்தம் !
யுத்தங்கள் அனைத்தும்
அமைதியை நோக்கித் தான் நடக்கிறது ,
அமைதியை கல்லறையில் தேட ...!
திண்ணை தேடும் வீடுகள் ...!
ஓய்வு எடுக்கத் திண்ணை
தேடிய மனிதன் மறைந்து போய்
இப்போது ,
திண்ணைகள் வீடுகளை
தேடுகிறது ...!
பாவ - மன்னிப்பு...!
மெழுகுவர்த்தியை
அழவைத்து ,
தேவனிடம்
பாவ - மன்னிப்பு ...!
பணம் !
ஏழைகளின்
அகராதியில் ,
அச்சுப்பிழைகள்
பணம் ...!
பசி ...!
மீதமான உணவை
தெருவில் கொட்டும் ஒவ்வொரு
பருக்கையிலும்
கூடுகிறது
ஏழையின் பசி ....!
கட்டாயம்..!
காட்சிகள்
சரியாகத் தெரிய
கண்ணாடி போட்டும்
தெரியாத வாறே
நடிக்கச் சொல்கிறார்கள்
-இது காலத்தின் கட்டாயம்…!
வெட்டு..!
வெட்டி எடுத்தேன்,
உயிர் பறிக்க இல்லை,
உயிர் விதைக்க,
மண்ணை – மண்வெட்டி
தப்பு-தாளம்…!
தப்பை
சரியாய்
அடித்தால்
-அது தாளம்…!
புகையின் வாசம்…!
மாநகரச்சாலை
ஓரப்பூங்காகளிலுள்ள
பூக்களும்
மணக்கிறது
புகையின் வாசமாய்…!
No comments:
Post a Comment