Monday, November 16, 2026

புத்தாக்கம்

 


ஒழுகும் கூரைகளிலிருந்து

இரவல் பாத்திரம் குடிக்கும் தண்ணீரை

நெகிழி கொண்டு அடைக்கும் சிறுமி


கருவறைச் சுவற்றில் தன் பாதம் கொண்டு

தான் கண்ட கனவை

வரைந்து கொண்டிருக்கும் சிசு


விதவைக் காகிதங்களுக்கு மறுமணம் தந்து

வார்த்தைகளுக்குத் தவமிருந்து

கவிதை எழுதும் கவிஞன்


காற்றைப் பிடித்துக் கிழித்துத் தைத்து

அழகாகக் கோர்த்து

இசை மீட்டும் கலைஞன்


இடுகாட்டில் தகன மேடையைச் சவம் எரிக்கும் முன்

ஓவியனின் நேர்த்தியுடன்

அலங்கரிக்கும் வெட்டியான்


அடம் பிடிக்கும் குழந்தைக்குச்

சொல்லப்படும் கதை போல

காதலியைச் சமாதானம் செய்யக்

கதைகள் புனையும் காதலன்


கருவில் இழந்த குழந்தையைத்

தன் வயிற்றுச் சுருக்கங்களில்

தடவிப் பார்த்துப் பேசும்

புத்தி பேதலித்த தாய்


தருணங்களால் புணரப்பட்ட

செயல்களில்

அண்டம் முதல் பிண்டம் வரை

மரபு மீறிப் பிறக்கும்

புதுக்கவிதை புத்தாக்கம்!


Sunday, November 15, 2026

உண்மையும் பொய்யும்

 



உண்மை 
முழு நிர்வாணம்;
தங்கள் பார்வைக்கேற்ப
ஆடையணிவித்து பார்க்கிறார்கள்.

பொய் 
வண்ண ஆடைகள்
அணிந்த ஒப்பனை;
அதன் ஆடை களைய விரும்புவதில்லை.

மனிதன்
ஆடை அணியத் தொடங்கிய பின்னர்
நிர்வாணம்
ஏனோ ஒவ்வாமை!




Saturday, November 14, 2026

நினைவுகள் ...


நீருக்கடியில் மூச்சுத் திணறுகையில்
தாயின் கருவறைப் பிரியும் நினைவு 

கடற்கரையில் அலைகள்
பாதம் தொடுகையில்
யாரையோ மன்னித்த நினைவு

கண் கலங்க வைத்த தூசியை
அகற்ற முற்படுகையில்
யாரையோ காயப்படுத்திய நினைவு
 
ஒளி முன் வந்து ஒலிப் பின் வரும்
மின்னல் காண்கையில்
பெயர் படிக்கும் முன்பை
முகம் மலர்ந்த நினைவு 

நினைவுகள் அப்படித்தான் ...
நினைப்பதால் நினைவுகளல்ல,
நினைக்க வைப்பதால் தான்
நினைவுகள் !