Monday, October 10, 2011

பூசை ..!








விநாயகர் சதுர்த்தியன்று
பிள்ளையாருக்கு
படைக்கப்பட்ட கொழுக்கட்டையை
பூசை செய்யும் முன் எடுத்து உண்டான்
அந்த வீட்டுச் சிறுவன் ..

சிறு பிள்ளை
உண்டதற்காகப் பிள்ளையார்
கோபப்படவில்லை..

அந்தப் பிள்ளையின் தாய்
கோபப்பட்டாள்..

பிள்ளையாருக்குப் பதிலாக
தன் பிள்ளைக்குப் பூசை செய்து கொண்டிருந்தாள் ..

அந்தப் பூசையைப் பார்த்த பிள்ளையார் ,
அரண்டு போய்
கொழுக்கட்டையையே பார்த்துக்கொண்டு இருந்தார் ..!


Sunday, October 9, 2011

சிசு கொலை ..


நிறைமாதக் கர்ப்பிணி
பூவின் பிரசவக்காலம்
தினந்தோறும் காலையில்
காற்றின் உதவியுடன்
பிரசவிக்கிறாள் பூ ,
தன் பிள்ளையான
வாசத்தைப் பூமிக்கு ...

பிறந்தவுடன் கையேடு அழைத்துச் செல்கிறது
தன் வாசப்பிள்ளையை ,
காற்று ஊரெங்கும் ...

ஆனால் ,
ஊருக்குள் அரக்கன் இருக்கிறான்
அவன்
புகையாக
காற்றின் பகையாக
இருக்கிறான் ...

செய்தியறிந்தக் காற்று ,
செய்வதறியாது திகைத்தது...

தன் பிள்ளை வாசத்தோடு
அங்கும் இங்கும் அலைந்தது ...

காற்றையும்
வாசத்தையும்
பார்த்த பகைவன் ,
புகையாக மாறி 
கொலை செய்தான் ...

வாசம் இறந்து கிடந்தது ..
தந்தை காற்று ,
ஓவெனக் கரைந்து அழுது வீசியது ..

இப்படியாக
பிரசவமும்
பச்சிளம் குழந்தை வாசத்தின் மரணமும்
தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது ..

Wednesday, October 5, 2011

மெழுகுவத்தி ..!





மழைக்காலத்தில் ,
மின்சாரம் துயில் கொள்ளும் நேரத்தில் ,
இருட்டில்
குத்துவிளக்கிற்குச் சக்களத்தியாக
வந்து வீடெங்கும் வாழும்
மெழுகுவத்தி நீ ..

தேவாலயங்களில்
எங்கள் பிரார்த்தனை
ஒளிக் கொடுக்கும் நீ ,
கோவிலில் மட்டும்
அந்நியப்பட்டுப் போனாய் ..

அந்நியமாகிப் போனாலும்
எங்கள் வீட்டில்
ஒளிக் காட்டுகிறாய் ,
வழிக் காட்டுகிறாய் ...

தனிமையில் உருகி
திரியில் கருகி
யாரையோ எண்ணி
கண்ணீர் வடிக்கிறாய் ..

உன்னை அழவைத்து
உருகவைத்து
கரையவைத்து
வெளிச்சம் காண்கிறோம்
தேவனிடமும் கேட்கிறோம்
பாவ மன்னிப்பு ..

தேவன் மன்னிப்பாரா?
இந்தப் பாவ மன்னிப்பை..

Tuesday, October 4, 2011

எதிர்மறை ..!






பலர் நோய்களில் சிலரின்
ஆரோக்யமான வாழ்கை
மருத்துவர் -நோயாளி
சிலர் சோம்பலில்
பலரது சுறுசுறுப்பான வாழ்கை
- சலவைத் தொழிலாளி

கர்வம்..!



பொழுது விடிந்ததில் ,
அந்தச் சேவலுக்கும்
சூரியனுக்கும்
சண்டையாம் ..
நான் எழுந்ததால்
நீ கொக்கரிதாய்
எனச் சூரியனும்,
நான் கொகக்கரித்ததால்
நீ எழுந்தாய்
என்று மாறி மாறி
மோதிக்கொண்டன ..
அதன் பின் சேவலோ
சண்டையை விட்டு விட்டு
கோவில் கூட்டத்தோடு
செல்லத் தயார் ஆனது ..
அந்தச் சேவல் இங்கு வந்த
நாள் முதல்,
தான் கடவுளுக்கு
என மமதையோடு
அலைந்து வந்தது ...
பொழுது போனால் உணவு ,
பாதுகாப்பான உணர்வு ,
இப்படி வாழ்ந்த சேவலுக்குத் தெரியாது
இன்று தான் சூரியனோடு தனக்கு
கடைசிச் சண்டை என ..
சேவல் மமதைக் கூடி ,
தான் கடவுளுக்காக என்பதை மறந்து
தான் கடவுள் என எண்ணியது ...
கடவுளை திருவிழா அன்று
காணப் போகிறோம் என்ன எண்ணி
தான் இறப்பதை மறந்தது ..
கோவில் செல்லும் புறப்பாட்டின்
தொடக்கமாகச் சகல மரியாதையுடன்
கொண்டுவரப்பட்டது சேவல்..
தலைகீழாகத் தொங்க விடப்பட்ட போது ,
"பாத்து அது சாமிக்கு நேர்ந்தது ", என ஒரு குரல்..
அந்தக் குரல் சேவலின் கர்வத்தை
மேலும் உயர்த்தியது ..
குங்குமம் இட்டு ,
பூச்சூடி,
மஞ்சள் நீராட்டி
எனச் சகல மரியாதையும் சேவலுக்குத் தொடர்ந்தது ..
அதன் பின் தொடர்ந்த
நிகழ்வில் புரிந்ததுசேவலுக்குத் தான் யார் என ..
மேலே தூக்கி
கீழே இறக்கப்பட்டது ,
கழுமரத்தில் சேவல் ..
கழுமரத்தில் 
அகப்பட்ட சேவல்
வேதனையோடு
தான் நிலைமை எண்ணி இறந்தது ..
இறப்பதற்கு
சில நொடிகள் முன்புதான்
உணர்ந்தது ,
கடவுளுக்கு நேர்ந்தது
என்ற வார்த்தையின் உண்மை அர்த்தத்தை ..   

Sunday, October 2, 2011

குருட்டுத் தர்மம் ..!





சில நேரங்களில்
குருட்டுப் பிச்சைகாரனிடம்
குருடனாக நடந்து கொள்கிறது
தர்மம் ..!

முரண்பாடு ..!





எதுகை இல்லை ,
மோனை இல்லை ,
புதுக்கவிதை
இலக்கணத்தின்
முரண்பாடு ..

கண்ணீர் உண்டு
ஆனால் துக்கமில்லை ,
உணர்ச்சியின்
முரண்பாடு ..

காக்கைக் கூட்டில்
முட்டையிடும் குயில் ,
தாய்மையின்
முரண்பாடு ..

புண்ணிய நதியை
அசுத்தமாக்கும் மனிதன்
நம்பிக்கையின்
முரண்பாடு ..

சாமியை மறந்து
சாமியாரை வணங்கும்
மனிதன் பக்தியின்
முரண்பாடு ..

நிகழ்காலம்
வரும்காலத்தின்
கடந்தகாலம் என்றால்
அது காலத்தின்
முரண்பாடு ..

நட்பும் இல்லை
காதலும் இல்லை
எந்த உறவிது
பருவத்தின்
முரண்பாடு ..

எழுத்து இல்லை ,
இலக்கணம் இல்லை ,
வார்த்தை இல்லை
விழி பேசும் மொழி ,
இது மொழியின்
முரண்பாடு ..

வெளிச்சத்தில்
தொலைந்து போகும்
இருள்
வெளிச்சத்தின்
முரண்பாடு ..

நினைக்காமல்
நினைக்க வைக்கும்
ஞாபகங்கள்
நினைவுகளின்
முரண்பாடு ..

சொல்லாமல் புரியும்
வார்த்தை
பேச்சின்
முரண்பாடு ..

முடிவில்லாமல்
முரண்படும் இந்த
முரண்பாடு
முரண்பாட்டின்
முரண்பாடு ..