Thursday, October 17, 2013

தனிமை ...










வார்த்தைகளைக் கூட
தனது துணையாய்ப் பயன்படுத்த முடியாத
சூழ்நிலையில் சில தனிமைகள் இருக்கிறது ...

இறவா
விடியற் பொழுதில்
கொக்கரிக்கும்
ஊமைச் சேவலாய்
இந்தத் தனிமையும் கொக்கரித்துப் போகிறது ..

தனது
கால்தடங்கள் தெரியாவண்ணம் இருக்க
வந்த வழிநெடுக
புன்னகை சிந்தி
அழித்துப் போகிறது ...

உடைந்து போன
கண்ணாடியின் பின்பங்களை
ஒன்றுசேர்க்க முடியாமல்
அந்தச் சிதறிப்போன கண்ணாடியிலேயே
தன முகம் பார்த்துக்
வெறுமையில் சிரிகிறது தனிமை ...

சிறைபட்ட பூவிலிருந்து தப்பித்து
காற்றோடு போய்
கரைந்து
மறைந்து
தொலைந்து போன தன்னைத் தானே தேடும்
வாசம் போல
தன்னைத் தேடுகிறதிந்தத் தனிமை ....

பாலைவனத்தில்
ஒற்றையாய் நிற்கும்
பட்டுப்போன மரத்தில்
தேன் குடிக்கக் காத்திருக்கும்
வண்ணத்துபூச்சிக்கு
தனிமை சொல்லும்
உண்மை புரிவதில்லை ..

தனது தனிமையை
போக்கத் துணையாக
மீண்டுமொரு தனிமையிடமே
சரணடைந்து
தனிமையில் வாடுகிறது தனிமை ...

Monday, October 14, 2013

இணையக்காதல்





நான் போடும் 
கிறுக்களுக்கு 
முகபுத்தகத்தில் 
நீ போடும் விருப்பத்துக்காக 
மடிக்கணினியை 
மணிகணக்கில் 
என் மடியோடு 
அணைத்தப்படி 
திரை மீது 
விழி வைத்து
காத்திருக்கிறேன்

Sunday, October 13, 2013

சத்தம்




புரியும் 
சத்தங்கள் யாவும் 
மொழியாகிறது ,
புரியாத சத்தங்கள் யாவும் 
வலியாகிறது 

உண்மை அர்த்தம் ..!




குப்பையில் 
எறியப்பட்ட காகிதத்தில்
எழுதிய கவிதையின் 
அர்த்தத்தில்
எந்த மாற்றமும் இல்லை ...

தூங்கா நினைவுகள் ..



சில நினைவுகள் மட்டும் 
வேண்டாதவையாக 
தீண்டாதவையாக 
இருந்தும் 
அடிக்கடி 
வந்து போகிறது 
சுகமாக ..


சில 
சொல்வதுமில்லை 
வெல்வதுமில்லை 
ஆனாலும் 
மனதை விட்டு 
விலகுவதுமில்லை ..

சில 
பார்வையிலே 
புன்னகை கோர்வையிலே 
மட்டும் இருந்திருக்கும் ..
ஆயினும் 
கண்மூடும் வரை 
உள்ளிருக்கும் ..

காரணமில்லை 
காரியமில்லை 
பருவத்தில் 
உருவான புயலால் 
உண்டான சேதத்தின் 
மிச்சம்..

தனிமையில் 
விழிக்கும் 
இரவினில் 
முழிக்கும் 
கனவினில் 
ரசிக்கும் ..

முதற்பதியம் 
போட்ட நிலமாய் 
அதன் பயிராய் 
அதன் நினைவுகள் 
பசுமையாய்   ..

இறுதியாய் 
கண்மூடும் போது 
இது தூங்கும் ..
வாழ்கை முழுதும் 
இதன் பாரம் தாங்கும் ..

தாய்க்கு 
தலைமகனாய் 
இந்த நினைவுகள் 
ஒவ்வொருவருக்கும் ..




Monday, October 7, 2013

தனிமை..!





அந்த வீட்டின்
முற்புறத்தில் இருக்கும்
ஊஞ்சலில் உறவாட யாரும் இல்லை ,
தினமும் காற்று வந்து
ஊஞ்சலில் உறவாடிச் செல்கிறது ...

Sunday, June 30, 2013

சோம்பல்- நீ என் காதலி...!










சோம்பல்
நான் விரும்பி அணைக்கும் காதலி ..

உனை முதல்முதலில் எங்குசந்தித்தேன் ,
கருவறையில் விழிப்புக்கு ஓய்வுக் கொடுத்தபோதா ?

சொல்லப்போனால்
என் முதல் காதலும் நீ தான்
இன்றுவரை என்னோடு இருக்கும் ஒரே காதலி நீ தான் ..

எப்போது என நினைவில்லை ,
எப்போதும் என் நினைவில் இல்லாமல் இல்லை ..

என் வளர்ச்சிக்குத் தடையாக நின்றாய் ,
என் முயற்சிக்கு குறுக்காய் நின்றாய் ,
என் பெற்றோர் கோபம் கொள்ளக் காரணமாக இருந்தாய்
ஆயினும் உன் மீது
சிறிதும் கோபம் வந்ததில்லை ,
என் காதலும் குறையவில்லை ....

பல நேரம் உனைக் கட்டி அணைத்தப்படியே
கட்டிலில் உறங்கி இருக்கிறேன் ..
உனை சிந்தித்தபடியே
எங்கும் கிறங்கிஇருக்கிறேன் ..
உனை வெறுக்கும் அத்தனை
முயற்சியிலும் தோற்றிருக்கிறேன் ..
அதிகாலை விழிப்பில்
முதலில்
நினைவில் நீதான் ..
இரவில்
உறக்கம் வருகையில்
முதலில் நீதான் ..


யார் வெறுத்தாலும்
யார் மறுத்தாலும்
என்னுள்
என் சிந்தையுள் இரண்டறக் கலந்த
சோம்பல்- நீ என் காதலி ...