Wednesday, August 24, 2011

தெருவிளக்கு ...!




தெருவின் ஓரம்
ஒற்றையாய் நின்று கொண்டு
இரவில் இருளின் வெளியை 
நிரப்ப முயலும்
தெரு விளக்கின் வெளிச்சத்தில்
இரவின் இருள் 
முழுவதுமாய் மாய்ந்து விடுவதில்லை ..

தெருவிளக்கிலிருந்து சிதறிய
ஒளித் துகள்கள் யாவும்
இருளின் ஒவ்வொரு
புள்ளியின் மையத்திலும்
மோதி ஒரு சிறிய போர்
ஒன்றை நடத்துகிறது ..

போரின் முடிவில்
ஒன்றையொன்று
முழுவதுமாக
வெற்றிக்கொள்வதில்லை..

முழு வெற்றியும் இல்லாத
தோல்வியும் இல்லாத
முடிவில்லா
இப்போர்
ஒவ்வொரு இரவு முழுவதும்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
எல்லாப்  போரைப்போல்,
அமைதியைக் கலைத்துக் கொண்டு ..

இங்கே அமைதியை
கலைப்பது
இருளிடமிருந்து ..

மாற்றம் ..!




மாற வேண்டும் என எண்ணுகையில்
ஏதோ ஒன்று 
எண்ணத்தை மாற்றி விடுகிறது
மாறவிடாமல் ..

முயன்று
நான் மாறியப் பொழுதுகளில்
மாறாமல் இருக்கும்
சூழ்நிலைகளையும்
நினைவுகளையும்
மாற்றுவதற்காக மட்டும்
மாறாமல் முயன்றுக்கொண்டிருக்கிறேன்..

Sunday, April 3, 2011

அம்மா ..!



ஒரு வீட்டுக்குள் 
குடி கொண்டு 
அனாதையாய் வாழ்ந்து வந்தேன் ..
குடிகொண்டது
மொத்தம்
பத்து மாதம் ..

கிட்டத்தட்ட
அது தனிக்குடித்தனம் ..

குடிகொண்ட நாள் முதல்
வாடகை தந்ததில்லை ..

பாசமாக
உன்னுள் வைத்து
உபசரித்து
பாத்து மாதம் கழித்து
வெளியே தள்ளிவிட்டு
அழவைத்த
கொடிய பாசக்காரி ..

உன் அன்பில் மயங்கி
வாடகைத் தர மறந்திருப்பேன் ..
அதற்காகவா
வெளியே தள்ளி விட்டாய்?

உன் செயலால்
எனக்குக் கோபம்..
பழி தீர்த்தேன் ,
உந்தன் வயிற்றில்
எட்டி உதைத்து
நீ என்னை வெளியே
தள்ளிய வேளையில் ..

உந்தன் தண்ணீரில் இருந்து
எந்தன் கண்ணீருடன்
வெளிவந்தேன் ..

உன்னுள் இருந்த வரை
காற்றுத் தீண்ட
அஞ்சியது ..
ஒளி தொட யோசித்தது ..

வேலையில்லை,
ஒரே வேலை தூக்கம்..
சில நேர விழிப்பில்
தூக்கத்திற்கு ஓய்வு ..

தனியாக இருந்தேன்
உந்தன் துணையோடு ..

சற்றுக் குழம்பிப் போனேன்,
இங்கு எல்லாம்
தலைகீழ் ..
என்னைத் தள்ளி விட்டாய்
அதனால் எல்லாம்
தலைகீழாக
மாறிவிட்டதோ ?

பயமாயிருந்தது ,
வெளிச்சம்
கண்டு இமைத் திறக்க
விழிகளும்
அஞ்சியது ..

என்னைச் சுற்றி பலர் ,
யாரை நம்புவேன் நான்..
அங்கும் இருந்தாய்
எனக்காக நீ..

இருளில் சென்றால்
நிழலும் பயந்து
மறைந்து ஓடும் ..
நீயோ இருளில் ஒளியாக
வெளிச்சத்தில் வழியாக
இருந்தாய் ..

என்னை நீ முத்தமிட்ட
முதல் கணம்
உன்னைப் பிடித்துப் போயிற்று ..
அப்போதுணர்ந்த
உந்தன் வெப்பம்
உந்தன் சுவரிசம்
நான் சேமித்த பொக்கிஷங்கள் ..

அவை உன்னைக் கூட்டத்தில்
காட்டிக் கொடுக்கும் ஆட்காட்டி ..
குருதியை பாலாகத் தந்து
உருதியாக்கியவளே..

நீ கொடுமைக்காரி
பாசமழையில்
பச்சைக் குழந்தையை
நனைய வைத்த
கொடியப் பாசக்காரி ..

எனக்கே புரியாத
அழுகை மொழி
உனக்கெப்படி புரிந்தது என்று
புரியவில்லை ..

அழுதிடும்
முதல் கணமே,
பசியறிந்து பாலூட்டி
ஓய்வறிந்து தாலாட்டி
நோயறிந்து குணமாக்கி ..

விழிகளில்
கண்ணீர் வழிந்திட்டால்
உன் நெஞ்சில்
வெந்நீர் உணர்ந்திட்டாய் ..

உன் வாய்மொழியில்
உணர்ந்தேன்
என் தாய் மொழியை ..

தவழ்ந்த போது
உன் கையைப் பிடித்து
நடைப் பழகிய போது ,
அம்மா என
உன்னை அழைத்த போது
உன் மகிழ்ச்சிக்கு இணை இல்லை,
அதை எழுதிட வானமே எல்லை ..

நீ ஊட்டும்
பால் சோற்றிடம்
யாசிக்கும்
தேவலோக அமுதமும் ..

நோயுற்றால்
உன் அன்பிடம்
யாசிக்கும்
குணமாக்கும் மருந்தும்..

நீ பாடும்
தாலாட்டிடம்
யாசிக்கும்
சப்தசுவரங்களும் ..

சோகமாக
உன் மடியில் படுத்தால்
வேகமாக
சொர்க்கமே வந்து
மகிழ்வித்திடும்..

கடவுள் யார் என
அடையாளம்
காட்டும்
என் கடவுள் நீ ..

மந்திரங்களும்
செய்யும் ஜாலங்களும்
தோற்றுபோகும்,
எக்காலமும்
எல்லோரும்
முதன் முதலில்
சொல்லும் மூன்றெழுத்து
மந்திரம்
-அம்மா ..!

Sunday, March 27, 2011

நம்பிக்கை ..!




இலைகள் யாவும்
காம்பின்
நுனியில் ,
காற்றின் தாலாட்டில்
ஊஞ்சல்
ஆடுகிறது ..!

மறுபக்கம் ..!





இருள்
கண்ட காட்சி மட்டும்
யாரும்
காண முடிவதில்லை,
இருளைத்  தவிர ..!

வலித்துகள்கள் ...!




ஒவ்வொரு
கண்ணீர் துளிகளும் ,
மனதில் உடைந்து
வெளியே சிதறும்
வலிகள் ...!

Saturday, March 19, 2011

ஒரு தலைக்காதல் ..!




பிடித்த இடத்திலிருந்து
பின் தொடர்ந்து செல்கிறது
தன் பயணத்தை நீட்டிக்  கொண்டு தீப்பொறி
சிதறிய எரிபொருளுக்காக 

போகும் பாதையில்
கோபமாய்
வழிபடும் இடர்களை எரித்து
மிச்சத்தை எச்சமாய்
வழித்தடமாக்கி விடுகிறது
மறந்துபோய் 

இதுவரை
யாருக்கும் தெரியாமல் இருக்க
இப்போது காட்டிவிட்டது
பாதையை 

தெரிந்துவிட்டது
குறிக்கோள் ,
இருப்பினும்
பின் தொடர்கிறது
அதன் நீளம் முழுக்க 

அடைவதையே
எண்ணிக்கொண்டு
தூரம்
காலம்
ஆபத்து
ஏதும் எண்ணவில்லை 

இறுதியாக
வந்தது பயணத்தின் 
முற்றுப்புள்ளியாய்
சிதறிய எரிபொருள் 
இடைவெளியில் 

தொடர்ந்தது
இந்த முற்றில் 
முடிந்தது

இறுதியாய்
அடைந்த இடத்தில், 
ஏக்கத்தோடு எரிந்து முடிந்தது
தீப்பொறியின் பயணம் 

இடைவெளியின்
முடிவில்
தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது
அந்த எரிபொருளின் சிதறல் ..!