அன்றொரு நாள் இரவில் ,
தூக்கம் இழந்தேன் .
தனியே எழுந்தேன் .
மேலே நடந்தேன் .
வானில் பார்த்தேன் .
தரையில் அமர்ந்தேன் .
மேலே நட்சத்திரக் கூட்டம் ஜொலித்தது .
என் மனதை அது மிகவும் கவர்ந்தது .
கூட்டத்தில் ஒன்று மிகவும் பிரகாசித்தது .
பார்ப்பதற்கு என் அருகில் வருவது போல் இருந்தது .
பார்க்கப் பார்க்க என்
பார்வையை நெருங்கியது ..
கண்சிமிட்டிப் பார்க்கையில்
என் அருகில் வருவது போல் இருந்தது .
தேவதை ..!
தேவதை..!
தேகமெல்லாம் தங்கமாய்
என் அருகில் ஒரு தேவதை ;
காட்சிகள் கண்களுக்கு மெய்ப்பட வில்லை .
மனமும் ஏனோ பயப்படவில்லை .
சிறிது நேரம் உறைந்து போனேன் ,
அவள் அழகை ரசிக்கையில் .
என் கருமணிகளும்
என் கண்களுக்குள்
சிறு குழந்தையெனத் துள்ளிக் குதித்து விளையாடுகிறது
அவள் அழகை ரசிக்கையில் ..
கரும் பாறையைத் தாண்டி விழும் அருவியாய் ,
அவள் கூந்தலும் அவள் சூடிய பூவும்.
மஞ்சள் நிலவாய் அவள் முகம் .
அதில் மயிலிறகாய் அவள் புருவம் .
அதன் கீழே பாலில் மிதக்கும் கருந்திராட்சைப் போல்
அவள் கண்கள் ..
பூவிதழ்களிலும் மெல்லிய ,
ஆண்களின் ஆசைகளைத் தூண்டும் காம ரேகை ஓடும்
செவ்விதழ் ..
மூங்கில் போன்ற வளைந்த அவள் தேகம் .
மூளை கிறங்கடிக்கும் ,
அழகிய வாழைத்தண்டு போன்ற கால்கள் ..
தாமரைப் போன்ற சிவந்த அவள் பாதம் ..
மெய் மறந்த வேளையில்
கல்யாணி ராகம் கேட்டேன்
ஆம் தேவதை சிரித்தாள்..
நிரம்பி இருக்கும் அணையைத் தாண்டி
வர முடியாத நதி நீரைப் போல் ,
அவளைக் கண்டதும்
தொண்டைக்குழியில் சிக்கிய வார்த்தைகள்
வெளிவரவில்லை ..
யாழினும் இனிய இசை
அன்று தான் நான் கேட்டேன்
ஆம். தேவதை பேசினாள் ..
"என்ன பார்க்கிறாய் ?",
இது தேவதை பேசிய முதல் வார்த்தை ..
"ஒன்றுமில்லை.." என்றேன் .
பின் மௌனத்தைப் புன்னகைத்தேன் ..
திடீரென ,
"என்னை முத்தமிடு " என்றாள்.
முக்கனியும் வந்து என்னைத் தின்றுவிடு என்பது போல் இருந்தது
அவள் சொன்ன அந்த வார்த்தை ..
ஆனால் ,
மனதில் ஒரு பயம் .
உணர்வில் ஒரு தயக்கம் .
பின் ,
பயத்தைக் கலைந்தேன்.
தயக்கம் இழந்தேன் .
அவள் அருகில் சென்றேன் .
அவள் முகத்தை என் கையோடு எடுத்தேன் .
நிலவை நான் கையில் தொட்டேன்.
ஆம் , நிலவை நான் கையில் தொட்டேன் .
பின் அவள் முகத்தோடு என் முகத்தை இணைத்தேன் .
"ஐயோ !",என ஒரு சத்தம் .
"டேய் எருமை மாடு ", அதைத் தொடர்ந்து .
என் தமையனின் குரல் அது .
அப்போது உணர்ந்தேன் ,
இதுவரை நான் கண்டது கனவு ..