Saturday, November 30, 2024

நிலந்தொடும் மழை


உனது கருணையைப் போல்
ஈரம் கசிகிற ஒரு மழை நாளில்
உனக்காகக் கடற்கரையோரக் 
குளம்பிக் கடையில் குழம்பியிருந்தேன் 

மண் சேர முயன்று தோற்றுப் போன மழை
ஏன் நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது ?
மழை குடித்த கடல்
ஏன் எப்போதும் போதையில் தள்ளாடுகிறது ?
மழையைப் பார்த்து நீ 
எப்போதும் கேட்கும் கேள்விகள்
மனதில் உன் நினைவோடு 
விளையாடிக் கொண்டிருந்தது

நீ வரும் முன்பே நமக்கான மேஜையில்
எதிரெதிரே அமர்ந்த தேநீர்
கோப்பையிலிருந்து ஆவியாகிப் போய்
ஒன்றை ஒன்று கட்டித் தழுவி கொண்டிருந்தது

கலவரப் புயலோடு வந்த நீ
என் எதிரே அமர்ந்தாய் 
கையில் ஒரு கூரிய வாளோடு

உன் கண்களிலிருந்து 
தற்கொலை செய்யத் தொடங்கியது மழை
தடுக்க முயன்ற
என் கைகள் தட்டி விட்டு
வாள் வீசி சென்றாய்

அன்பின் நிலம் தொட்ட
அந்த மழைத்துளியை 
பின் தொடர்ந்து சேர்ந்து கலந்தது
வடியும் குருதி

அப்போது அங்கே
 பூக்கத் தொடங்கியது
ஓர் அலரிப்பூ


 

Saturday, November 23, 2024

அன்பின் நினைவுகள்

 


அன்பின் நினைவுகள்

பறவை இறந்த பின்பும் 
அது உதிர்த்த ஒரு இறகு
பறந்து கொண்டிருக்கிறது








Sunday, October 27, 2024

நான் கடவுள்?

 


நான் ஏதோவாக இருந்தேன்

என்னைக் கடவுள் ஆக்கிக் கொண்டாடினார்கள்

இப்போது நான்

வேறு ஒரு கடவுளை 

தேடிக்கொண்டிருக்கிறேன்

Saturday, October 26, 2024

காலம்


இல்லாத எதிர்காலத்தை
இறந்த காலத்திற்கு
கடத்திக் கொண்டிருக்கிறது
இருந்து இல்லாமல் போகும்
நிகழ் காலம்

"நேத்து போய் அந்தச் சட்டை வாங்கி
உனக்கு நாளைக்குத் தரேன்" என்றபடி
பொம்மையிடம் பேசிக் கொண்டிருந்த
குழந்தையிடம்
காலம் குழம்பிப் போகிறது


 

Friday, October 18, 2024

தூய அன்பு

 



இருத்தலில் உணரும் அன்பும்
செயலில் உணர்த்தும் அன்பும்
நினைவில் உருகும் அன்பும்
சொல்லில் உதிரும் அன்பும்
ஒன்றல்ல

ஆனால்
காது பொத்தி நந்தியிடம்
சத்தமாய் சொல்லும் குழந்தையின்
தூய பிரார்த்தனைக்கு ஒத்தது
இவையாவும் 

Saturday, October 5, 2024

அன்பு

யானையைப் போல
வளர்ந்து நிற்கிறது
உனது அன்பு
அதன் நிழலில் 
படுத்து உறங்கும் பாகன்
எனது நம்பிக்கை 

பனிக் குடத்து நீரில்
மூச்சுத் திணறுவதில்லை 
உன் அன்பும் 
உன்னோடு இருக்கும் போதும் 
அப்படித்தான்


Sunday, September 29, 2024

நினைவின் நீட்சி



மாலை நேரம் ஜன்னல் வழி
என் கையோடிருக்கும் தேநீர் கோப்பையில்
நிரம்பி வழிகிற உன் நினைவை
எதைக் கொண்டு பிடிப்பேன்

நாம் ரசித்த பாடல் ஒன்று
இன்று தனியே நான் கேட்கும் போது
செவியில் பாடும் உன்  குரலை 
எதைக் கொண்டு தடுப்பேன் 

தாய் தேடி ஓடும் சேய் போல
நித்தமும் உனைத்  தேடி ஓடும் 

என் கண்ணீரை
எதைக் கொண்டு நிறுத்துவேன்


பெரு மழையில் நனைகையில்
நெஞ்சில் பிசுபிசுக்கும்

உன் முகத்தை 
எதைக் கொண்டு உலர்த்துவேன் 


தனிமையின் சுவற்றில்

பல வண்ண ஓவியங்கள் வரையும்

நீ சொன்ன கனவுகளை 

எதைக் கொண்டு கலைப்பேன் 

உனைப்  பற்றி எழுத மறுக்கும்

மனதை மீறி வந்து விழும்

இந்த கவிதைகளை
எதைக் கொண்டு அழிப்பேன்

Saturday, September 28, 2024

காதல்


ஓர் நீர்க்குமிழிக்குள்  சிறைப்பட்டு

காலமும் தவம் கிடப்பது


இதழ் விரியா மலருக்குள் சிக்கிக் கொண்டு

உள்ளூற மணப்பது 


சேவலின் தொண்டைக் குழியில் சூல் கொண்டு

அதிகாலை வெளிவர மறுப்பது


நீருக்கு வெளியே குதித்த மீன் மீண்டும் நீர்ப் புக மறுத்து

காற்றோடு பறந்து வாழ எத்தனிப்பது


பலூனில் மாட்டிக் கொண்ட காற்றாய்

சீமைக் கருவேலமரக் காட்டில் பறப்பது


பிறந்த சிசுவின் கைகளில் மாட்டிக் கொண்ட விரலாய்

எடுக்க முடியாமல் மயங்கி இருப்பது 


உதை வாங்கி‌ விரட்டப்பட்ட நாயாய்

மீண்டும் எஜமான் வீட்டு வாசலிலேயே தவம் கிடப்பது


இப்படி எளிதாக 

விட்டு விடுதலையாக வாய்ப்பிருந்தும்

தானாய் முன்வந்து அழகாய் 

சிலுவையில் சிறைப்பட்டுக் கிடப்பது காதல்

Saturday, September 14, 2024

குளம்









Swathi Mutthina Male Haniye (2023 kannada-என்ற கன்னட படத்தில் வரும் ஒரு கன்னட கவிதையின் தமிழாக்க முயற்சி இது . இணையவழி இந்த திரைப்படம் பார்த்ததால் ஆங்கில வசன வரிகள் (subtitle ) இந்த கன்னட கவிதையை புரிந்து கொள்ள உதவியாக இருந்தது 


அன்று போல் இல்லை 
இன்று இந்த குளம் 

அப்போதெல்லாம்
இந்த சகதி பாசிகள் இல்லை  
அதிகாலை நடை பயில வரும் பனியுடன் 
மெலிதாய் சலசலத்து பேசிக்கொண்டு இருந்தது

நண்பகல் சூரியனின் பிம்பத்தைக்  கண்டு 
கண்கூசியபடி ரசித்துக்கொண்டிருந்தது

இரவில் வரும் 
நிலவையும் நட்சத்திரங்களையும் 
தன்னில் தாலாட்டிக் கொண்டிருந்தது 

ஆம் 
இந்த குளம் உயிர்ப்புடன் இருந்தது  

அன்று போல்  இல்லை
இன்று  இந்த குளம் 

வெகுகாலமாக மேய்ச்சல் நிலத்தில் தவழ்ந்து கொண்டிருந்த
குளிர் காற்றை ஆரத் தழுவிக் கொண்டிருந்தது 

பின் ஒரு கடுங்கோடையின் வெயிலில் ஆவியாகி 
தன்னை நிர்வாணமாக்கத் தொடங்கியது  

இறுதியில் சுட்டெரிக்கும் வெப்பத்தையும் அது தந்த காயங்களையும் 
ஏற்றுக்கொண்டு அமைதியாகத் தொடங்கியது  

இன்று குளத்தில் நடந்து சென்றால் 
இருப்பதெல்லாம் சேரும் சகதியும் 

ஆனால் அன்று குளம் 
இது போல் இல்லை 
அது  உயிர்ப்புடன் இருந்தது 

அன்று பார்த்தது போல் இல்லை
இன்று இந்த குளம் 

ஆனால் ஏனோ சில காலமாக
இப்போது போலவே 
எப்போதும் இருக்கக் குளம் எண்ணியது 

வெயிலுக்கும் மழைக்கும் மாறி மாறி 
மாறுவேடம் போட அதற்கு விருப்பமில்லை 
 
எப்போது மாறாமல் 
மூடுபனியுடன் கிசுகிசுக்காமல் 
சூரியனுடன் காதல் உறவாடாமல் 
நிலவையும் நட்சத்திரங்களையும் 
நினைவிலும் தேடாமல் 
இருக்கவே குளம் விரும்பியது 

ஒருவேளை 
மூடுபனியிடமும் 
சூரியனிடமும் 
பேசும்போது 
தன்னை தொலைத்து விட்டால் ?

இல்லை , குளம் தன்னை இழக்கக்கூடாது 
இப்போது போலவே எப்போதும் இருக்கவேண்டும் 

பழைய நினைவுகளின் சவப்பெட்டி மேல் 
பூக்கள் துளிர்விடுவதால் 
அது உயிர்ப்புடன் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறது 

ஆனால் 
இந்த சேறு சகதி 
மக்கிக்கொண்டிருக்கும் இலைகள் 
தூக்கிப் போடப்பட்ட ஷாம்பூ பாக்கெட் 
எதுவும் உயிருடன் இல்லை 
ஜீவன் இருப்பதற்கான ஒரு அறிகுறியுமில்லை 
மன்னித்து விடுங்கள்  

அன்று போல் இல்லை 
இன்று இந்த குளம் 

Friday, September 13, 2024

அழகிய நாட்கள்



தாயின் அரவணைப்பில்
தூங்கிய குழந்தை
தாய் விலகிய பின்னர்
நீண்ட நேரம் கழித்துத்
திடுக்கிட்டு விழிப்பது போல
வாழ்வின் அத்தனை அழகிய நாட்களும் 
நம்மை விட்டு விலகிய பின்னர்
நினைவுகளில் விழித்துக் கொள்கிறது ...

தொலைதூர விண்மீன்களாய்
 கால வெளியின் அண்டத்தில்
ஆங்காங்கே சிறு புள்ளியாய்
புன்னகைக்கிறது நம்மைப் பார்த்து
அழகிய நாட்கள் ..



 

Saturday, March 16, 2024

தனிமை ..



வீட்டில் இருக்கும்

பழைய துருப்பிடித்த குழாய்

யாருக்கும் தெரியா வண்ணம்

அழுதுகொண்டே இருக்கிறது.

வீட்டில் யாருமற்ற வேலையில்

அதன் அழுகை

சத்தமாகக் கேட்கிறது ...



Saturday, March 9, 2024

ஞாபகங்கள்

 



நீருக்கடியில் 

மூச்சுத் திணறுகையில்

தாயின் கருவறை 

பிரியும் நினைவு 

Friday, March 1, 2024

கடல்




கடல் அலைகள் 

கால் தொடும் போதெல்லாம் 

ஏனோ யாரையேனும்

மன்னிக்கத் தோன்றுகிறது ..

Monday, February 26, 2024

அன்பின் சுவை ...!

 


அன்பின் சுவை பழகிய மனம்,

அது வளர்ப்புப் பிராணியின் நாக்கு 

அதன் கனவெல்லாம் தன் எஜமானை வருடி விடுவது

அது கடல் அலை 

அது செய்வதெல்லாம் விடாமல் ஏதோ ஒன்றைத் தேடுவது

அது மானின் வாய்

அது வேண்டுவதெல்லாம் எப்போதும் அசைபோட ஏதோ ஒன்று

அது மீனின் கண்கள்

அதன் ஆசையெல்லாம் இமைகளற்று எப்போதும் பார்த்திருப்பது

அது நிறைக்க முடியா கிணறு

அதன் தேவையெல்லாம் உள்ளூற ஏற்பது

அது கங்காருவின் மடிப்பை

அதன் வேலையெல்லாம் பாரம் சுமப்பது 

அது சிசுவின் பசி

அதற்குப் பார்ப்பதெல்லாம் பால் சுரக்கும் காம்பு ..

Sunday, February 11, 2024

வரவேற்பு

 


வாசலில் உதிர்ந்திருக்கும்‌

பூக்களை

சுத்தம் செய்கையில்

மலருக்கும் மாசுக்கும்

வேறுபாடு இல்லை

Thursday, February 1, 2024

மழை


 

சிறு மழை போதும்

உன் நினைவு துளிர் விட

உனைத் தீண்டி அனைத்திட ...


முகம் மோதும் மழையில் உன் முத்தம்

தரை மோதும் மழையில் உன் சத்தம்

புயல் மழையில் உன் கோபம்

மண் நனைத்த முதல் மழையில் உன் வாசம்

அதிகாலை தூறலில் உன் பூமுகம்

பொன்மாலைச் சாரலில் உன் சிநேகம்

உடல் நனைத்த மழையில் உன் தழுவல்

ஆலங்கட்டி மழையில் உன் செல்ல அடி


இப்படி ஒவ்வொரு மழையிலும்

அதன் ஒவ்வொரு துளியிலும்

நீயே இருக்கிறாய்

என் நெஞ்சை நனைக்கிறாய்

Sunday, January 28, 2024

பெருவெளிச்சம்

 


நினைவுச் சாலையில் பயணம் செய்கிறேன்

எதிர்ப்படும் ஊர்திகள் கடந்து  போகிறது

சிலநேரம்‌ அதன் பெருவெளிச்சம்

கண்களைக் குருடாக்குகிறது

Sunday, January 21, 2024

பிரியாத வரம் வேண்டும்


வலையில் மாட்டிய படி

கடலை வெறித்துப் பார்க்கும்

மீனின் கண்களில் தெரியும் பிரார்த்தனை 


புயலில் கிளையின் விளிம்பில்

ஊஞ்சலாடும் இலையின் பிரார்த்தனை 


தாயின் கருவறை பிரிகையில்

கண்ணீர் சிந்தா சிசுவின் அழுகையில் கேட்கும் பிரார்த்தனை 


இறுதிச் சந்திப்பின்

கடைசி முத்தத்தில் பிரியும்

இதழ்களின் பிரார்த்தனை


புத்துணர்ச்சி முகாமிலிருந்து

மீண்டும் பயணப்படச் சுமை ஊர்தி ஏறும்

கோவில் யானையின் பிரார்த்தனை


மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில்

மருத்துவரின் இறுதி வார்த்தைக்குக் காத்திருக்கும்

உறவுகளின் பிரார்த்தனை


இத்தனை பிரார்த்தனைகளிலும்

வேண்டப்படுகிறது பிரியாத வரம்


குன்றின் பாறைகளைப் பிரித்துச் செய்யப்பட்ட

கடவுள் சிலைகள் முன் வைக்கப்படும்

பிரார்த்தனைகள் கேட்டு

கடவுளும் குழம்பிப் போகிறார் !