Monday, November 23, 2026

காதல்

 



ஓர் நீர்க்குமிழிக்குள் சிறைப்பட்டுக்

காலமும் தவம் கிடப்பது


இதழ் விரியா மலருக்குள் சிக்கிக்கொண்டு

உள்ளூற மணந்து கிடப்பது


சேவலின் தொண்டைக் குழியில் சூல் கொண்டு

அதிகாலை வெளிவர மறுப்பது


நீருக்கு வெளியே குதித்த மீன் மீண்டும் நீர்ப் புக மறுத்து

காற்றோடு பறந்து வாழ எத்தனிப்பது


பலூனில் மாட்டிக் கொண்ட காற்றாய்ச்

சீமைக் கருவேல மரக் காட்டில் பறப்பது


பிறந்த சிசுவின் கைகளில் மாட்டிக்கொண்ட விரலாய்

எடுக்க முடியாமல் மயங்கிக் கிடப்பது


இப்படி எளிதாக விட்டு விடுதலையாக வாய்ப்பிருந்தும்

தானாய் முன்வந்து அழகாய்ச் சிலுவையில்

சிறைப்பட்டுக் கிடப்பது காதல்

No comments: