Friday, February 24, 2012

வேண்டும்..!வேண்டாம்...!





தூங்காத இரவுகள் வேண்டும்
விடியாத இரவுகள் வேண்டாம்
களையாத கனவுகள் வேண்டும்
மாறாத கனவுகள் வேண்டாம்

உதிராத பூக்கள் வேண்டும்
வாசமில்லா பூக்கள் வேண்டாம்
சாய்க்காத புயல் வேண்டும்
வீசாத தென்றல் வேண்டாம்

களையாத மேகம் வேண்டும்
தூராத மேகம் வேண்டாம்
தாலாட்டும் பாடல் வேண்டும்
செவி பிய்க்கும் பாடல் வேண்டாம்

கருணைக் கொண்ட கண்கள் வேண்டும்
கலங்கும் கண்கள் வேண்டாம்
ஆறுதல் தரும் வார்த்தை வேண்டும்
காயம் தரும் வார்த்தை வேண்டாம்

நிழல் தரும் மரமாக மனது வேண்டும்
மரம் உதிரும் சருகாக மனம் வேண்டாம்
விடையாக வாழ்க்கை வேண்டும்
புதிராக வாழ்க்கை வேண்டாம்

பிறரை நேசிக்கும் பக்தி வேண்டும்
தன்னை மறக்கும் பக்தி வேண்டாம்
மனிதர்களாக மனிதர்கள் வேண்டும்
பொய்யாக மனிதர்கள் வேண்டாம்

மாசற்ற அன்பு வேண்டும்
பற்றற்ற அன்பு வேண்டாம்
நினையாத நினைவுகள் வேண்டும்
வலியாக நினைவுகள் வேண்டாம்

பிரியாத உறவுகள் வேண்டும்
உயிரற்ற உறவுகள் வேண்டாம்
வேண்டாதவையும் சில நேரம் வேண்டும்
வேண்டுபவையும் சில நேரம் வேண்டாம்

Sunday, January 29, 2012

ஒரே பார்வையும் ஒரே ஒரு புன்னகையும் ..!






ஒரே பார்வை தான் ,
ஒரே புன்னகை தான் ,
ஆனால்
எத்தனை ஜாலங்கள் செய்கிறது ...

பல்வேறு சூழ்நிலைகளில்
பல்வேறு தருணங்களில்
பல்வேறு காலங்களில்
எத்தனை உணர்ச்சிகளுக்கு
தாயாகிறது ...

முதல் பார்வையில் ,
மயக்கம் 
பரவசம் 
வெட்கம் 
தயக்கம் 
வியப்பு  சந்திப்பு ...

ஒவ்வொரு சந்திப்பிலும் ,
பூரிப்பு 
சிரிப்பு 
மகிழ்ச்சி 
ஆறுதல் 
ஆசை  ...

ஒவ்வொரு ஆசையிலும்  ,
மோகம் 
தாகம் 
காமம் தணியாத காதல்  ...

ஒவ்வொரு காதலிலும்  ,அன்பு மகிழ்ச்சி
உடைமையுணர்வு 
பயம்
ஊடல்  ...

ஒவ்வொரு ஊடலிலும் ,
கோபம் 
சோகம் 
திகைப்பு 
மோதல் கூடல்  ...

ஒவ்வொரு கூடலிலும்,இன்பம்
உச்சம்
களிப்பு
 மகிழ் மிகு கண்ணீர் முன்னம்  விட
அதிகக் காதல்  ..

இறுதிச் சந்திப்பில் ,
அதிர்ச்சி 
திகைப்பு 
காயம் 
தனிமை  ...

தனிமையில்,
சிரிப்பு 
சோகம் 
வலி  மிகு கண்ணீர் 
வெறுமை  நினைவுகள் ...

ஒரே பார்வை தான் ,
ஒரே புன்னகை தான் ,
ஆனால்
எத்தனை உணர்வுகள்  ...!

Friday, January 27, 2012

அலைகளின் பேச்சு






கரை தொட்டு
பின் செல்லும் அலைகள் 
எதோ ஒன்றை
கரையில் 
நுரையாய் எழுதிச் செல்கிறது ..

எழுதிச் செல்லும் பொழுது
ஏதோ ஒன்றை கரையிடம்
சத்தமாகச் சொல்லி விட்டுச்  செல்கிறது ..

அந்த
அலைகளின் எழுத்துக்களை
படித்துவிட முயற்சிக்கிறேன் ..
புரியவில்லை ...

அந்த
அலைகளின் சத்தத்தைக் கேட்டு
அதன் மொழியை
புரிந்து விட முயற்சிகிறேன்
விளங்கவில்லை ..

தரையாக இல்லாததால்
என்னவோ
அதை
படிக்கவோ
கேட்கவோ முடியவில்லை ..

முயன்றுப் படிக்கும் பொழுதுகளில் 
அந்த எழுத்துக்கள் யாவும்
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு அர்த்தம் தருகிறது

ஒவ்வொரு முறை
அந்தப் பேச்சைக் கேட்கும் பொழுதும்
அது வெவ்வேறாக ஒலிக்கிறது ...

சிறிதாய் எழுத்துக்கள்
புரிந்த வேளையில்
அலைகள் வந்து அதை அழித்துவிட்டு
புதிதாக எழுதிச் செல்கிறது ...

சற்று 
புரியும் பொழுது 
அது தன் பேச்சை
நிறுத்திக் கொள்கிறது  ...

கடைசிவரை அலைகளின்
பேச்சும் எழுத்தும்
புரியவில்லை ..

உலகிலிருக்கும் பல்வேறு
புரியாத மர்மங்கள் போல்
இந்த
பேச்சும் எழுத்தும்
மர்மமாகவே உள்ளது ...!

Monday, January 2, 2012

மௌனத்தின் சத்தங்கள் ...!







மௌனம் சத்தம் போடுமா ?
சற்று மௌனமாகச் சிந்தித்ததில்
அது ஆம் என்றது சத்தமாக ..

என்னை விட்டுப் போய்விடுவாயா ?
எனக் காதலியிடம் கேட்டக் கேள்விக்கு
பதிலாய் வந்த மௌனம்இன்றும் மனதில் சத்தம் போடுகிறது ...

எம் இன மக்கள்
எட்டிய தூரத்தில் இருந்தும்
கொத்து கொத்தாய்ச் சாகையில்
இங்கு அமைதி காத்த மக்களின் மௌனம்
ஈழத்தில் குழந்தையின் அழுகையாய்க் கேட்கிறது ..

பேச வேண்டிய தருணங்களில்
நான் காத்த மௌனங்களே
இன்று வரை நினைவில் சத்தம் போடுகிறது ..

நான் திட்டிப் போன வேளையில்
மௌனம் காத்த தந்தையின் மௌனங்கள்
என்னைச் சத்தமாகக் குத்திக் காட்டுகிறது ..

உயிரெனக் கலந்த உறவுகள்
உயிரற்றச் சவமாகக் கிடக்கையில்
என்னில் கண்ணீராய்ச் சத்தம் போடுகிறது ..
இப்பொழுது சொல்லுங்கள்
மௌனம் சத்தம் போடும் தானே ..

Saturday, December 10, 2011

கடவுளும் மனிதனும் ...!





கடவுள் மனிதனைப் படைத்தார் ,
மனிதனும் பல கடவுள்களைப் படைத்தான் ..

கடவுள் மனிதம் இல்லா மனங்களில் பேயைக்  கண்டார் ,
மனிதன் கடவுள் இல்லா இடங்களில் பேயைக்  கண்டான் ..  

கடவுள் மனிதன் மனதை கல்லாய்க் கண்டார் ,
மனிதன் கடவுளை கல்லில் கண்டான் ..

கடவுள் இதிகாசங்களில் மனிதன் ஆனார் ,
மனிதன் சில தருணங்களில் கடவுள் ஆனான் ..
 
கடவுளும் பூமியில் மனிதனை தேடுகிறார் ,
மனிதனும் கடவுளைத் தேடி அலைகிறான் ..

இறுதியில் ,
கடவுளும் பல நேரம் கடவுளாக இல்லை  
மனிதனும் பல நேரம் மனிதனாக இல்லை ..

Sunday, December 4, 2011

பட்டம்..!





சிறகின்றிப் பறக்கும்
உயிரின்றித் துடிக்கும்
காற்றைச் சுவாசிக்கும்
அதைச் சுவாசிக்கும் வரை
நிலைக்கும் ..

எப்போதும் உயர வேண்டும் என
நினைக்கும் ..

தன் நம்பிக்கை
நூல் கொண்டு
திசை நோக்கி
குறிக்கோளோடு
பறக்கும் ..

மது அருந்தாமலேயே 
தள்ளாடியபடியே
தனியே நிற்கும் ..


மனிதன் கையில்
இருப்பதால் என்னவோ
போட்டி வந்துவிட்டால்
அடுத்தவனை அறுக்கும் ..

பறவையும் போட்டி போடும் 
உன்னைப் பார்த்து ..

ஒற்றைக்காலில்
காற்றின் மெல்லிய
இசைக்கு நாட்டியமாடும்..

உண்மையில்
நான் படிக்காமல்
வாங்கிய பட்டம் நீ ..


Saturday, December 3, 2011

உறவுகள் ..!



காதுகளோடும்
வாயோடும்
உறவாடும்
கைபேசி ..

கண்களோடு
உறவாடும்
தொலைக்காட்சி ..

இப்படி மாறிப்போனதால்
மனதும் மறந்து போனது
மனிதரோடு உறவாட ...!